நாமக்கல் அருகே, விவசாயம் செழிக்க, நிறைமாத கர்ப்பமாக உள்ள கோயில் பசு மாட்டிற்கு கிராம மக்கள் வளைகாப்பு சடங்கு நடத்திய சம்பவம் பரவலாக கவனம் பெற்றுள்ளது.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே உள்ள கொல்லிமலை அடிவாரத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் வனபத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் லட்சுமி என்ற பெயரில் பசுமாடு பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த மாடு தற்போது 7 மாத கர்ப்பமாக உள்ளது.
இந்நிலையில் அப்பகுதி பொதுமக்கள் விவசாயிகள் தின விழாவின் ஒரு பகுதியாக, கோயில் பசுவான லட்சுமிக்கு வளைகாப்பு சடங்கு செய்ய தீர்மானித்தனர். அதன்படி, கோயில் வளாகத்தில் பூசாரி கணேசன் தலைமையில் பெண்கள் பசுவுக்கு புதிய பட்டுப்புடவை போர்த்தினர். விதவிதமான கண்ணாடி வளையல்களை மாலையாக தொடுத்து லட்சுமியின் கழுத்தில் அணிவித்தனர். அதன் கொம்பு, உடல் முழுவதும் பூக்களால் அலங்காரம் செய்தனர். கழுத்தில் பல வகை மலர்களால் ஆன மாலையும் அணிவித்தனர்.
கர்ப்பிணி பெண்ணுக்கு தாய் வீட்டார் செய்வது போலவே, அந்த பசு மாட்டிற்கு புளி சாதம், தயிர் சாதம், சர்க்கரை பொங்கல், புதினா சாதம், கொத்துமல்லி சாதம், தேங்காய் சாதம், மாங்காய் சாதம், எலுமிச்சை சாதம், தக்காளி சாதம் ஆகிய 9 வகையான சாதங்களை படைத்தனர். இதையடுத்து பக்தர்கள், பொதுமக்களுக்கு கலவை சாதங்களை பிரசாதமாக வழங்கினர்.
இதுகுறித்து கோயில் பூசாரி கணேசன் கூறுகையில், ''வனபத்ரகாளியம்மன் கோயில் பசுமாடு நிறைமாத கர்ப்பிணியாக உள்ளதால் அதற்கு வளைகாப்பு செய்து வழிபட்டால் விவசாயம் செழிக்கும் என்று நம்பிக்கை உள்ளது. இதனால் இதுபோன்ற நிகழ்ச்சியை நடத்தினோம்'' என்றார்.
நிறைமாத கர்ப்பிணியாக உள்ள கோயில் பசுவுக்கு வளைகாப்பு வைபவம் நடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை வெகுவாக ஈர்த்தது.