Skip to main content

எனக்கு மாப்பிள்ளையை பிடிக்கல... தாலி கட்டும் நேரத்தில் தகராறு செய்த பெண்

Published on 23/08/2018 | Edited on 23/08/2018
I do not like the groom...


தாலி கட்டும் நேரத்தில், எனக்கு மாப்பிள்ளையை பிடிக்கல என கூறி மணப்பெண் தகராறு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியை சேர்ந்தவர் ஜெகதீசன். 34 வயதான இவர் மலேசியாவில் பணியாற்றி வருகிறார். ஜெகதீசனுக்கு அவரது உறவினர்கள் திருமணம் செய்வதற்காக பல இடங்களில் பெண் பார்த்து வந்தனர். இந்த நிலையில் சேலம் மாவட்டம் கெங்கவல்லியை சேர்ந்த ஒரு பெண்ணை பார்த்து திருமணம் நிச்சயம் செய்தனர். 
 

 

 

திருமணத்திற்காக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஜெகதீசன் சொந்த ஊருக்கு வந்தார். திருமணத்திற்கான வேலைகளை இருவீட்டாரும் செய்து வந்தனர்.  கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில் திருமணம் நடப்பதாக பத்திரிக்கை அச்சடித்து உறவினர்கள் மற்றும் சொந்த ஊரில் உள்ளவர்கள், நண்பர்கள் என எல்லோருக்கும் பத்திரிக்கை கொடுக்கப்பட்டிருந்தது. 
 

 

 

இந்த நிலையில் இன்று கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில் திருமணம் நடப்பதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இருவீட்டாரின் உறவினர்கள், நண்பர்கள் மணமக்களை வாழ்த்துவதற்காக வந்திருந்தனர். திருமணத்திற்கு வந்தவர்களுக்கு உணவுகளும் தயார் செய்யப்பட்டிருந்தன. மணப்பெண்ணுக்கு கொடுமுடி கோவிலில் ராகு-கேது பரிகாரம் செய்யப்பட்டது. பிறகு திருமணத்துக்காக மாப்பிள்ளை மணமேடையில் அமர்ந்திருந்தார்.
 

திருமணத்துக்கு பெண்ணை அழைத்து வந்து அமர வைத்தனர். மாப்பிள்ளை மணமகள் கழுத்தில் தாலி கட்டுவதற்காக முயன்றார். அப்போது திடீரென மணப்பெண் மாப்பிள்ளையை தாலி கட்ட விடாமல் கையை பிடித்து தட்டி விட்டார். இதனால் மாப்பிள்ளை ஜெகதீசனும் மற்றும் இரு வீட்டாரின் உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
 

 

 

பெண்ணிடம் சென்று என்னவென்று விசாரித்துள்ளனர். அப்போது அந்த பெண், ‘‘மாப்பிள்ளை எனக்கு பிடிக்கவில்லை. எனக்கு திருமணம் வேண்டாம்’’ என கூறியதும், இரு வீட்டாரும் கடும் அதிர்ச்சியடைந்தனர். இருவீட்டாரும் பெண்ணை சமாதானப்படுத்தினர். இருப்பினும் அப்பெண், மாப்பிள்ளை பிடிக்கவில்லை. ஆகையால் திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கண்டிப்புடன் கூறியுள்ளார். 
 

இதையடுத்து இரு வீட்டாரையும் சேர்ந்த உறவினர்கள் கலந்து பேசினர். திருமணம் வேண்டாம் என்று பெண் கண்டிப்பாக இருந்ததால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நிறுத்தப்பட்டது. நிச்சயிக்கப்பட்ட திருமணம் தாலி கட்டும் நேரத்தில் நின்றது கோவிலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

 

சார்ந்த செய்திகள்