திருவாரூரில் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கணவரின் சகோதரி குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அடுத்த கீழ்பட்டு மேல்பாதை சிற்றுரை சேர்ந்தவர் ராணி. இவருடைய கணவர் உயிரிழந்த நிலையில் மூன்று மகள்கள் மற்றும் மகன் ராஜாராம் உடன் வசித்து வருகிறார். ராணியின் சகோதரர் ராஜேந்திரனும் அவரது மனைவி ரேவதியும் ஒரு நிகழ்விற்காக அவரது வீட்டிற்கு வந்திருந்தனர். அப்பொழுது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ராணி, அவரது மூன்று மகள்கள் மற்றும் அவரது மகன் ராஜாராம் ஆகியோரை ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதாக கிராமப் பஞ்சாயத்து சார்பில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அந்த துண்டுப் பிரசுரத்தில், ‘ராஜாராமின் குடும்பம் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. மற்ற குடும்பத்தினர் யாரும் அவர்களோடு பேசவோ வேலைக்கு கூப்பிடவோ கூடாது. எந்த உறவும் வைக்கக் கூடாது. மீறி யாரேனும் பேசினாலோ வேலைக்கு கூப்பிட்டாலோ அவர்களும் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்படுவார்கள்’ என அச்சிடப்பட்டிருந்தது.