தமிழகம் வந்த முன்னாள் இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கரூர் மாவட்டம் அவரக்குறிச்சியில் 'வில்லேஜ் குக்கிங் சேனல்' என்ற குழுவினருடன் சேர்ந்து காளான் பிரியாணி சமைத்து சாப்பிட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரவேற்பையும் பெற்று இருந்தது.
இந்நிலையில் அண்மையில் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு, பாஜக மாநாட்டில் பேசுகையில், ''மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை வந்துள்ளது. பாஜகவை பார்த்தவுடன், மோடியை பார்த்தவுடன் வருகின்ற பயம் இருக்கிறதே அதுதான் பாஜகவின் முதல் வெற்றி. தமிழகத்தில், நமக்கு யாராவது சோறு முக்கியமா சங்கம் முக்கியமா என்று கேட்டால் என்ன சொல்வீர்கள். நமக்கு சங்கம் தான் முக்கியம், நமக்கு நம் வேலைதான் முக்கியம். ஆனால் டெல்லியில் இருந்து ஒரு தலைவர் வருகிறார். சோறு முக்கியமா சங்கம் முக்கியமா என்றால் எனக்கு சோறு தான் முக்கியம் என அவரே காளான் பிரியாணி செய்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். இதுவரைக்கும் தமிழகத்தில் பாஜக என்ன சாதித்திருக்கிறது என்று கேட்கிறீர்கள். நான் கேட்கிறேன் அறுபது வருட ஆட்சியில் காங்கிரஸ் என்ன சாதித்து விட்டீர்கள். மதரீதியான கட்சி என எங்களை பார்த்து சொல்கிறீர்கள். ஜாதி ரீதியாக கட்சியை நீங்கள் நடத்துகிறீர்கள் ஸ்டாலின் அவர்களே'' என்றார்.
தமிழகம் வந்த ராகுல் காந்தி கிராமத்து சமையல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டது குறித்து குஷ்பு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.