திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய திருவண்ணாமலை மாவட்டத்தின் முக்கிய காவல்துறை அதிகாரி தனது குடும்பத்தாருடன் சென்றுள்ளார். அப்படி சென்றவருக்கு கோயில் அதிகாரிகள், ஊழியர்கள் சரியாக மதிக்காததோடு, அமர்வு தரிசனத்துக்கு கதவு திறந்துவிடாமல் மற்றவர்களைப்போல் வரிசையில் அனுப்பியுள்ளனர்.
இதுஅவரை அதிர்ச்சியாக்கியுள்ளது. இதில் அதிருப்தியானவர் தன் குடும்பத்தாருடன் கோயிலில் இருந்து வெளியே வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று டிசம்பர் 14ந்தேதி கோயிலின் நான்கு கோபுர நுழைவாயிலில் மட்டும் பாதுகாப்புக்கு போலீஸாரை நிறுத்திவிட்டு, கோயிலுக்குள் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுயிருந்த காவலர்களை திரும்ப பெற வைத்துள்ளார் எனக்கூறப்படுகிறது.
தீபத்திருவிழா முடிந்ததாக கூறப்பட்டாலும் அதிகாரபூர்வமாக மலை உச்சியில் எரியும் 11 நாள் தீபம் முடிந்தபின்பே முடிந்ததாக அர்த்தம். மலை உச்சியில் தீபம் எரிவதால் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையாரை தரிசிக்க கோயிலுக்கும், கிரிவலத்துக்கும் வருகின்றனர். கோயிலுக்குள் கூட்டம் அதிகமாக இருப்பதால் காவல்துறை பாதுகாப்பு வேண்டும் என கோயில் நிர்வாகம் கேட்டு வாங்கியுள்ளது. அப்படியிருக்க அனுமதி தரும் காவல்துறையின் முக்கிய அதிகாரியின் குடும்பத்துக்கு அவமானம் என்பதால் காவல்துறை வட்டாரம் கோபமாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.