ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று தமிழக கிராம ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடத்துவது வழக்கம். இந்த கூட்டத்தில் தங்கள் கிராமத்திற்கு தேவையான திட்டங்கள் தேவைகள் பற்றி விவாதிப்பார்கள். தேவைகளை தீர்மானமாக நிறைவேற்றி ஊராட்சி தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள் மூலம் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய ஆணையர்களுக்கு அனுப்பி அவர்கள் மூலம் மாவட்ட ஆட்சியருக்கும் மாநில அரசுக்கும் தெரிவிப்பார்கள்.
அப்படி மக்கள் குறிப்பிடும் பிரச்சனைகளை தீர்ப்பதற்கும் அவர்களுக்கு தேவையான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் உருவாக்கப்பட்டது கிராமசபை கூட்டம். உதாரணமாக நேற்று நடைபெறுவதாக இருந்த கிராமசபை கூட்டத்தை நடத்த வேண்டாம் என்று தமிழக அரசு நள்ளிரவில் திடீர் தடை விதித்தது. மக்கள் கும்பலாக கூடினால் கரோனா பரவல் ஏற்பட்டுவிடும் என்ற காரணத்திற்காக கிராமசபைக் கூட்டம் நடத்துவது நிறுத்தப்படுவதாக அரசு அறிவித்தது.
இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தனர். டாஸ்மாக் கடைகளில் எந்த சமூக இடைவெளியும் கடைப்பிடிக்காமல் கூட்டம் கூட்டமாக மது வாங்குகிறார்கள் அப்போதெல்லாம் கரோனா நோய் பரவல் ஏற்படாதா? கிராமசபை கூட்டம் திறந்தவெளியில் சமூக இடைவெளி விட்டு நடத்தினால் என்ன? என்ற கேள்வியை எழுப்பினார்கள். இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் கிராமசபை கூட்டங்களில் திமுகவினர் கலந்துகொண்டு மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் திருத்த சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றுமாறு அறிவித்திருந்தார்.
கிராமசபை கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பும் ஒரு காரணம் என்கிறார்கள் திமுகவினர். இதை எதிர்த்து விழுப்புரம் மாவட்ட செயலாளர் புகழேந்தி தலைமையில் காந்தாளி என்ற கிராமத்தில் கிராமசபை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. மாவட்ட துணை செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பராஜ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதேபோல் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளர் எம்.எல்.ஏ. உதயசூரியன் தலைமையில் அரசம்பட்டு, செல்லம்பட்டு ஆகிய ஊர்களில் கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட செயலாளர் புகழேந்தி தலைமையில் தடையை மீறி கிராமசபை கூட்டம் நடத்தியதற்காக 60 பேர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.