பயணிகளை சுமந்து செல்லும் அப்பேருந்தை பார்த்து, ‘விபத்தை ஏற்படுத்தும் பேருந்து’ என்று சொல்லக்கூடாதுதான். ஆனால், அப்பேருந்தின் பின்வாசல் கதவு அப்படியிருந்தால் இப்படிச்சொல்லி எச்சரிக்கைப்படுத்திதான் ஆகவேண்டும். இல்லையென்றால் நிச்சயம் யாருடைய உயிரையாவது பலிவாங்கிவிடும்.
2018 ஆகஸ்டு 31 ந்தேதி மதியம் 2 மணியளவில் கோயம்பேடு டூ ஆற்காடு அரசுப்பேருந்து (வண்டி எண்: தநா 23 நா 2387) சென்னை மதுரவாயல் சாலை வழியாக சீறிப்பாய்ந்து சென்றுகொண்டிருந்தது. அப்போது, பின்வாசல் கதவானது தாழ்ப்பாள் இல்லாததால் கயிறுபோட்டு வெளிப்புறமாக கட்டப்பட்டிருந்தது. எப்போது, வேண்டுமானாலும் கயிறு அவிழ்ந்து; அறுந்து கதவு திறக்கப்பட்டு… பின்னால் வரும் வாகனத்தில்;வாகன ஓட்டிகள் மீது மோதிவிடுமோ என்ற உயிரச்சத்தை உண்டாக்கிக்கொண்டிருந்தது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுசென்றால், ‘அப்படியெல்லாம் இல்லையே பேருந்து நல்லாத்தானே இருக்கு?’ என்று அசால்டாக சமாளித்துவிட வாய்ப்பிருக்கிறது. அதனால், நமது செல்ஃபோன் மூலம் ஃபோட்டோ எடுக்க ஆரம்பித்தோம். நமது டூவீலர் பின்னால் மற்றொருவர் அமர்ந்திருந்தால் அவர் மூலம் ஃபோட்டோ எடுப்பது எளிது. ஆனால், அப்படி யாரும் இல்லாததால் அதிவேகத்தில் சென்றுகொண்டிருக்கும் அப்பேருந்தை கவனத்துடன் டூவீலரில் பின் தொடர்ந்தோம். சில நிமிட சேசிங்கிற்குப்பிறகு கயிறு போட்டு கட்டப்பட்டிருக்கும் அந்த பேருந்தின் கதவு, பேருந்தின் எண் அனைத்தையும் வீடியோ பதிவு செய்துகொண்டோம்.
இதுகுறித்து, கோயம்பேடு பேருந்துநிலையத்தின் போக்குவரத்து உதவி ஆணையர் ஜான் சுந்தரின் கவனத்துக்கு கொண்டுசென்றபோது, வாகன எண் மற்றும் விவரங்களை குறித்துக் கொண்டதோடு, “உடனடியாக நடவடிக்கை எடுக்கிறேன் சார்” என்றார் உறுதியோடும் அக்கறையோடும்.
நம், கண்ணில் பட்ட பேருந்தின் நிலைமை இப்படி. நம் கண்ணில் படாத பல பேருந்துகளின் நிலைமை… வலைதளங்களில் செய்திகளாக உலாவும் பேருந்துகளின் நிலைமை இதைவிட மோசம். ஆனாலும், நம் கண்ணில் பட்டதை எச்சரித்து விபத்திலிருந்து வாகன ஓட்டிகளை பாதுகாக்கவேண்டியது நமது கடமையல்லவா?!