சென்னை வர்த்தக மையத்தில் இரண்டு நாட்கள் நடைபெறும் ‘உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024’ - ஐ தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (07-01-24) தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் இலக்கினை எட்டுவதற்கான செயல்திட்ட அறிக்கையை வெளியிட்டார்.
இந்த மாநாட்டில் பல்வேறு முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் தொழில் கொள்கைகள் அறிமுகம் செய்யப்பட்டன். இதனைத் தொடர்ந்து, பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்து ஆனது. மாநாட்டில் 50 நாடுகளைச் சேர்ந்த 450க்கும் மேற்பட்ட சர்வதேசப் பிரதிநிதிகள், உலகப் புகழ்பெற்ற 170 பேச்சாளர்கள் பங்கேற்றனர். மாநாட்டில் தொழில் கருத்தரங்குகள், வணிக ஈடுபாடுகள் தொடர்பான கண்காட்சிகள் உள்ளிட்டவை இடம்பெற்றன. பல்வேறு நிறுவனங்களின் முடிவுற்ற பணிகளைத் தொடங்கி வைத்தும், முன்னணி பன்னாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டும், புதிய திட்டப் பணிகளுக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
இந்த நிலையில், மாநாட்டின் இரண்டாவது நாளான இன்று வில்லேஜ் குக்கிங் யூட்டியூப் சேனல் குழுவினர் பங்கேற்றனர். அப்போது அவர்களிடம் நீங்கள் ஏன் மற்ற நிறுவனங்களுக்கு ப்ராண்ட் ப்ரோமேஷன் செய்வதில்லை என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர்கள், “ நாங்க யூட்டியூப் சேனல் ஆரம்பிக்கும் முன்பே எங்களுக்கு என்று ஒரு விதிமுறையை வகுத்துக்கொண்டோம்; நாங்கள் கண்டெண்ட்டை தாண்டி இதுதான் பண்ண வேண்டும், இதெல்லாம் பண்ணக்கூடாது என்று ஒரு விதிமுறையை பின்பற்ற ஆரம்பித்தோம். அதில், ஒரு விதிமுறை யாருக்கும் ப்ராண்ட் ப்ரோமோசன் செய்தும், ஸ்பான்ஸர்ஷிப் மூலமாகவும் ஒரு ரூபாய் கூட பணம் வாங்கக்கூடாது என்பதுதான். அதைத்தான் தற்போது வரை நாங்கள் பின்பற்றிக்கொண்டிருக்கிறோம். விக்ரம் படத்தில் நடித்ததற்கு கூட ஒரு பைசா கூட வாங்கவில்லை. அதேபோன்று எத்தனை ஆஃபர் வந்தாலும் வேண்டாம் என்று சொல்லியிருக்கிறோம்.
ரசிகர்கள் ஒரு 10 நிமிடம் எங்களது வீடியோவை பார்க்கிறார்கள் என்றால், அது அவர்களுக்கு பிடித்துதான் பார்க்கிறார்கள்; அதில் நாங்கள் வேண்டும் என்றே, 10 செகண்ட் விளம்பரம் போட்டு, அந்த பொருளை வாங்குங்கள், இந்த பொருளை வாங்குங்கள் என்று சொல்வது எங்கள் மனதிற்கு ஒப்பவில்லை; அதுமட்டுமில்லாமல் முதலில் 10 ரூபாய்க்கு இதுபோன்று விளம்பரம் செய்ய ஒத்துக் கொண்டால், பின்பு அந்த பத்து, நூறாக மாறும், நூறு ஆயிரமாக மாறும். இப்படி போக போக பணம் அதிகரிக்கும். அதனால் பணத்தாசை வந்துவிடும். இதனை தவிர்க்கவே நாங்கள் வீடியோவில் யாருக்கும் ப்ராண்ட் ப்ரோமொஷன் செய்வதில்லை. எங்களுக்கு ஏற்கனவே யூட்டியூபில் வரும் விளம்பரத்தை ரசிகர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்; அதில் இருந்து வரும் வருமானமே போதும்.
எங்களுக்கு 5 மில்லியன் சப்ஸ்கிரைபர் இருக்கும் போது ஒரு சாக்லெட் கம்பெனி வந்து, உங்கள் வீடியோவில் யாருக்காவது பிறந்தநாள் என்று எங்களது சாக்லெட்டை கொடுத்தால் போதும், ஒரு பத்து செகண்ட் வந்தால் போதும் ரூ.4.5 லட்சம் தருகிறோம் என்றார்கள். அதனை நாங்கள் மறுத்துவிட்டோம். அதுதான் எங்களுக்கு வந்த முதல் ஆஃபர். தற்போதுவரை வந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் எங்களின் விதிமுறையில் சரியாக இருக்கிறோம்” என்றார்.