விஜய்யின் மக்கள் இயக்கம் சமீப காலமாகத் தீவிரமாகச் செயல்பட்டு வரும் நிலையில், தொடர்ந்து இயக்கத்தில் உள்ள பல்வேறு அணிகளை ஒருங்கிணைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகிறது. மேலும் தனது மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்ற விஜய் முடிவு செய்திருந்தார். அதே சமயம் நிர்வாகிகளிடம் பூத் கமிட்டிகளை வலுப்படுத்துங்கள்; எப்போதும் தேர்தலுக்குத் தயாராக இருங்கள்; நமது இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றும் காலம் வந்துவிட்டது என நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுறுத்தி வந்தார். இந்த சூழலில் விஜய்யின் கட்சி பெயர் அறிவிக்கப்பட்டு ‘தமிழக வெற்றி கழகம்’ என பெயர் சூட்டப்பட்டு டெல்லியில் உள்ள இந்தியத் தேர்தல் ஆணையத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்த விஜய்யின் முதல் அரசியல் அறிக்கையில், 'என்னைப் பொறுத்த வரையில் அரசியல் மற்றொரு தொழில் அல்ல; அது ஒரு புனிதமான மக்கள் பணி. அரசியலின் உயரம் மட்டுமல்ல, அதன் நீள, அகலத்தையும் அறிந்து தெரிந்து கொள்ள, எம்முன்னோர் பலரிடமிருந்து பாடங்களைப் படித்து நீண்டகாலமாக என்னை அதற்கு தயார்படுத்தி, மனதளவில் பக்குவப்படுத்திக் கொண்டு வருகிறேன். எனவே அரசியல் எனக்கு பொழுதுபோக்கு அல்ல; அது என் ஆழமான வேட்கை. அதில் என்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளவே விரும்புகிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய்யின் இந்த அறிவிப்பை அடுத்து, தமிழகத்தில் உள்ள அவருடைய ரசிகர்கள் பல்வேறு இடங்களில் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் கொடுத்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை பனையூரில் உள்ள நடிகர் விஜய் வீட்டிற்கு முன்பு திரண்ட இயக்க நிர்வாகிகள் பட்டாசு வெடித்து தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதேபோல அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு இனிப்புகளை பகிர்ந்து கொண்டனர். இதேபோல் தமிழகத்தில் கோவை, ஈரோடு, மதுரை, திருச்சி ஆகிய பகுதிகளிலும் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் அவருடைய ரசிகர்கள் பட்டாசுகளையும் வெடித்து, இனிப்புகளை வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். சில இடங்களில் விஜய் மக்கள் இயக்க கொடியை பிடித்துக் கொண்டு கோஷங்களை எழுப்பி தங்களது மகிழ்ச்சிகளை வெளிப்படுத்தினர்.