கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் தே.மு.தி.க. செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசுவதற்கு முன்பாக அ.தி.மு.க கூட்டணியில் இருந்து தே.மு.தி.க விலகிய தகவல் வந்துசேர்ந்தது. இதனால், விஜய பிரபாகரனின் பேச்சில் அனல் தெறித்தது.
அவர் பேசியதாவது, “அ.தி.மு.க கூட்டணியிலிருந்து தே.மு.தி.க விலகியது பண்ருட்டி பலாவைவிட இனிப்பான செய்தி. நம் தயவில்தான் அ.தி.மு.க. இதுவரை ஆட்சியில் இருந்தது. இதுநாள் வரை நம் கைகள் கட்டப்பட்டு இருந்தது. இனி சுதந்திரப் பறவையாகப் பறப்போம். அதிமுகவுக்கு இனி இறங்குமுகமாக இருக்கும்; வரும் தேர்தலில் அ.தி.மு.கவுக்கு தேர்தலில் தக்க பதிலடி கொடுப்போம்.
என்ன சும்மா எடப்பாடி.. எடப்பாடி.. அவரென்ன எம்.ஜி.ஆரா? ஜெயலலிதாவா? இந்தவாட்டி எடப்பாடியிலேயே மண்ணைக் கவ்வுவிங்க. இனி எதிர்க்கட்சியாகக்கூட அ.தி.மு.க உட்காரக் கூடாது. அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியும் மண்ணைக் கவ்வும். தலைவர் 234 தொகுதியிலும் வேட்பாளர் அறிவிக்கச் சொல்லிவிட்டார். 234 தொகுதியிலும் கேப்டன்தான் வேட்பாளர். இனி பட்டையக் கிளப்பப் போகிறோம்.
இனிமேல் என்னுடைய ஆக்ஷன் எப்படி இருக்கும் பாருங்க; தைரியமாக இருங்க. நிறைபேர் நம்ம முதுகுல குத்தி இருக்காங்க. நாம் திருப்பி குத்தனும். சாணக்கியனாக இருந்தது போதும். சத்ரியனாக இருக்க நேரம் வந்துவிட்டது. தலையே போனாலும், தன்மானத்தை இழக்க மாட்டோம். எவர் எல்லாம் நம்மை ஏளனமாகப் பார்த்தாரோ, அவர்களுக்கு நமது வலிமையைக் காட்டனும். 2014ல தாமரை மலரனும்னு ஊர் ஊராகச் சுத்தினார் கேப்டன். பாகுபலியை குத்திட்டாங்க. மீண்டும் கேப்டனை சிம்மாசனத்தில் உட்கார வைக்கனும்" இவ்வாறு விஜயபிரபாகரன் ஆவேசமாகப் பேசினார். கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் சிவக்கொழுந்து உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.