அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை திரும்ப பெறக் கோரி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட சென்ற விஜயகாந்த் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து கீரமங்கலத்தில் தே.மு.தி.கவினர் சாலை மறியல் செய்தனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கர்நாடகாவைச் சேர்ந்த சூரப்பாவை துணை வேந்தராக நியமித்தது எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றவது போல உள்ளது என்று தமிழகத்தில் உள்ள பல அரசியல் கட்சிகள், அமைப்புகள் போராட்டங்கள் நடத்தி வருகிறது. இந்த நிலையில் துணைவேந்தர் சூரப்பாவை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னையில் தே.மு.தி.க சார்பில் விஜயகாந்த் தலைமையில் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடந்தது. அந்த போராட்டத்தில் விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட தே.மு.தி.கவினர் கைது செய்யப்பட்டனர்.
சென்னையில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட தே.மு.தி.கவினர் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், துணைவேந்தர் சூரப்பாவை திரும்ப பெறவேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கீரமங்கலம் பேருந்து நிலையம் அருகே தே.மு.தி.க ஒன்றியச் செயலாளர் விஜயராஜகுமாரன் தலைமையில், நகரச் செயலாளர் தனசேகரன், ஒன்றிய அவைத் தலைவர் பால்ராஜ், மாவட்ட இலக்கிய அணி பெரியமுரளி ஆகியோர் முன்னிலையில் ஏராளமான தே.மு.தி.க நிர்வாகிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலின் போது பல்வேறு முழக்கங்களை எழுப்பினார்கள்.
சாலை மறியல் நடந்து கொண்டிருந்த போது பட்டுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி செல்லும் ஒரு தனியார் பேருந்து மாற்று வழியில் செல்ல முயன்ற போது தே.மு.திக. தொண்டர்கள் அந்த பேருந்தை ஓடிச் சென்று வழிமறித்து நிறுத்தினார்கள். சுமார் 40 நிமிடங்களுக்கு பிறகு மறியல் நடந்த இடத்திற்கு வந்த கீரமங்கலம் போலிஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்தார்.