தென்காசி மாவட்டத்தின் புளியங்குடி நகரைச் சேர்ந்தவர் அய்யாக்குட்டி. நகரிலுள்ள ஜவுளிக் கடையில் வேலை பார்த்து வருபவர். மனைவி கனகலட்சுமியோ பீடி சுற்றும் தொழிலாளி. தம்பதியருக்கு எம்.எஸ்.சி படித்த பட்டதாரியான ஆவுடைச்செல்வி (25) ஒரே மகள். இச்சூழலில் தன் மகள் ஆவுடைச்செல்விக்கு திருமண ஏற்பாடுகளைச் செய்ய ராயகிரி பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவரை அய்யாக்குட்டி திருமணம் பேசி முடித்திருக்கிறார். வருகிற 23ம் தேதி இவர்களின் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
திருமண ஏற்பாடுகளைக் கவனித்து வந்த அய்யாக்குட்டி, நேற்று முன்தினம் அவர், அவரது மனைவி, மகள் ஆகியோர் தனி அறையில் தூங்கிக்கொண்டிருந்தனர். ஆனால் வீட்டின் முன் கதவைப் பூட்ட மறந்துவிட்டு தூங்கியுள்ளனர். நடு இரவு சுமார் 12 மணியளவில் வீடு புகுந்த மர்ம நபர் தூங்கிக் கொண்டிருந்த அய்யாக்குட்டியை கத்தரிக் கோலால் கழுத்தில் சரமாரியாகக் குத்திவிட்டுத் தப்பியோடியிருக்கிறார். துடிதுடித்து படுகாயமடைந்த அய்யாக்குட்டி சம்பவ இடத்திலேயே பலியாகியிருக்கிறார். அவரது கதறல் சத்தம் கேட்டு மனைவி மற்றும் மகள் தூக்கத்திலிருந்து பதறி எழுந்து வந்து பார்த்த போது அய்யாக்குட்டி சடலமாகக் கிடப்பதைக் கண்டு அலறினர்.
தகவலின் பேரில் சம்பவ இடம் வந்த புளியங்குடி டி.எஸ்.பி. வெங்கடேஸ்வரன், இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விட்டு விசாரணையை நடத்தியிருக்கிறார்கள். கனகலட்சுமி மற்றும் அவரது மகள் ஆவுடைச்செல்வியிடம் தனித் தனியே விசாரணை நடத்திய போலீசார் அவர்களிருவரின் அலைபேசியையும் பறிமுதல் செய்தனர். பல கோணங்களில் விசாரணை பயணித்தது.
பின்னர் அப்பகுதியிலுள்ள கோவிலின் பக்கமுள்ள தெரு பிற இடங்களிலுள்ள அனைத்து சி.சி.டி.வி.களிலும் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தவர்கள் அதில் பேண்ட் சர்ட் அணிந்த 25 வயது மதிக்கதக்க இளைஞர் ஒருவர் நள்ளிரவில் பைக்கில் செல்லும் காட்சி பதிவானதைக் கண்டு அவரைத் தீவிரமாகத் தேடினர். தீவிரத் தேடுதலில் அந்த மர்ம நபரை வளைத்து விசாரித்ததில் பக்கத்திலுள்ள டி.என்.புதுக்குடியைச் சேர்ந்த செல்வமுருகன் என்பது தெரிய வந்திருக்கிறது.
அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் டிப்ளமோ இன்ஜினியரிங் படித்த செல்வமுருகன் தன் தந்தையுடன் காண்ட்ராக்ட் பணியிலிருப்பவர். அய்யாகுட்டியின் மகள் ஆவுடைச்செல்வி மீது தனக்கு அளவு கடந்த காதல். ஆனால் என் காதலை அவளிடம் சொல்லாமலே இருந்துவிட்டேன். ஒருதலைக் காதல். ஆவுடைச்செல்விக்கு திருமணம் பேசி முடித்து விட்டதை அறிந்த நான் அன்றைக்கு என் காதலை அவளிடம் சொல்லிவிட வேண்டுமென்ற துடிப்பில் நடு இரவு போதையில் அவள் வீட்டிற்குச் சென்றேன். அப்ப அவளோட தந்தை தூங்கிக் கொண்டிருந்தவர் சத்தம் கேட்டு எழுந்துவிட்டார். பயந்து போன நான் திடீர்னு பக்கத்துல கிடந்த கத்தரிக்கோலால் அவரது கழுத்தில் குத்திவிட்டு வெளியே ஓடிவந்து விட்டேன் எனத் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து போலீசார் செல்வமுருகனை கைது செய்துள்ளனர்.