வீட்டில் கிளிகளை வளர்ப்போர் உடனடியாக வனத்துறையிடம் கிளிகளை ஒப்படைக்குமாறு மதுரையில் வனத்துறை அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று நோட்டீஸ் வழங்கியதோடு வீட்டில் வளர்க்கப்பட்ட கிளிகளையும் பறிமுதல் செய்தனர்.
மதுரையில் வீடுகளில் கிளிகளை வளர்க்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஜூலை 17 ஆம் தேதிக்குள் வீட்டில் வளர்க்கப்படும் கிளிகளை பொதுமக்கள் வனத்துறையிடம் ஒப்படைக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் வீடு வீடாகச் சென்ற வனத்துறை அதிகாரிகள் வீடுகளில் இருந்து சட்ட விரோதமாக வளர்க்கப்பட்ட 20க்கும் மேற்பட்ட கிளிகளைக் கூண்டோடு பறிமுதல் செய்தனர்.
தமிழ்நாடு வனவிலங்கு பாதுகாப்பு திருத்தச் சட்டம் 2022ன் படி கிளிகள் பாதுகாக்கப்பட்ட பறவையாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாகக் கிளிகளை வீடுகளில், கடைகளில் வளர்க்கக் கூடாது. அதேபோல் விற்பனையும் செய்யக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மதுரையில் செல்லூர் பகுதியில் நூற்றுக்கணக்கான கிளிகள் வீடுகளில் வளர்க்கப்படுவதாகவும், அதற்கு ஒவ்வாத உணவுகளைக் கொடுத்து வருவதாகப் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட வன அலுவலர் தலைமையில் சோதனை நடத்தப்பட்டு சட்ட விரோதமாக வளர்க்கப்பட்ட கிளிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
செல்லூர் பகுதியில் பல பெண்கள் தங்கள் வீட்டில் வளர்த்த கிளிகளைக் கண்ணீருடனும், சோகத்துடனும் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பெண் ஒருவர் பாசமாக வளர்த்து வந்த கிளியை வனத்துறையிடம் கொடுக்கும் பொழுது கண்ணீர் விட்டுக் கதறி அழுதார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்திக்கையில், ''என் பேரு முருகேஸ்வரி. என் புள்ள மாதிரி இந்த கிளியை வளர்த்தேன். என் பிள்ளைய சென்னையில கட்டிக் கொடுத்துவிட்டேன். பசங்க எல்லாம் வேலை வாங்கி அங்கேயும் இங்கேயும் போய் விடுகிறார்கள். இது மட்டும்தான் என்னோட வீட்டில் இருக்கும் பேசிக்கிட்டு. அபின்னு கூப்பிட்டா ஓடி வரும். அதனுடைய பேர் அபி. கூப்பிட்டா மேல ஏறி விளையாடும். ரொம்ப மனசு கஷ்டமா இருக்கு. முதல்ல ரெண்டு கிளி வளர்த்தேன். அது பறந்து போச்சு. ஒன்னுதான் இருக்கு. எல்லாமே சாப்பிடும். தயிர் சாதம், பச்சை மிளகாய், பழங்கள் எது வச்சாலும் எல்லாமே சாப்பிடும்'' என்றார் சோகத்துடன்.