Skip to main content

லஞ்சம் பெற்றதாக விஜயபாஸ்கரின் தந்தையே ஒப்புதல் வாக்குமூலம்! - உடனடியாக விஜயபாஸ்கர் பதவி விலகிட வேண்டும்: மு.க.ஸ்டாலின்

Published on 01/09/2018 | Edited on 01/09/2018


“அரசுப் பணிகளுக்கான லஞ்சப் பணத்தை தானே வசூல் செய்ததாக அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தையே ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருப்பதால், இனியும் பதவியில் நீடிக்காமல் உடனடியாக அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலகிட வேண்டும்” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையின் போது “சத்துணவு அமைப்பாளர்” பதவிக்கு விண்ணப்பித்தவர்கள் பெயருடன் “பிரவுன் கவரில்” இருந்த 20 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டதாகவும், அந்த பணத்தை தான் பெற்றுக் கொண்டதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார் என்று வெளிவந்துள்ள செய்திகள் ஏற்கனவே அமைச்சர் விஜயபாஸ்கர் இந்த குட்கா விவகாரத்தில் வாங்கிய லஞ்சத்தையும், அமைச்சர் பதவியிலும் பெற்றுள்ள லஞ்சத்தையும் மேலும் உறுதி செய்திருக்கிறது.

இது தவிர திருவேங்கைவாசலில் உள்ள அமைச்சரின் குவாரிகளில் 43 மீட்டர் ஆழத்திற்கு வெட்டி எடுக்க அனுமதி பெற்று விட்டு, 72 மீட்டர் ஆழத்திற்கு வெட்டி எடுக்கப்பட்டதும் வருமான வரித்துறையால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 2 லட்சத்து 95 ஆயிரத்து 642 கியூபிக் மீட்டருக்குப் பதில் 25 லட்சத்து 51 ஆயிரத்து 868 கியூபிக் மீட்டர் வரை குவாரிகளை வெட்டி எடுத்து அரசுக்கு 250 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பை ஏற்படுத்தியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எல்லாவற்றையும் விட 20 கோடியே 75 லட்சத்து 91 ஆயிரத்து 500 ரூபாய் வரை லஞ்சம் வசூலான பட்டியல் விவரங்களும் வருமான வரித்துறையிடம் சிக்கியிருக்கிறது.

ஏற்கனவே அமைச்சர் ஊழல் விவரங்கள் அனைத்தும் தேதி வாரியாக “குட்கா டைரியில்” வெளிவந்து, உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் தற்போது சி.பி.ஐ. விசாரணையில் இருக்கின்ற நிலையில், அரசு பணிகளிலும் அமைச்சரின் தந்தையே லஞ்சம் பெற்றதை ஒப்புக்கொண்ட பிறகும், 20 கோடிக்கு மேல் லஞ்சம் வசூல் செய்த பட்டியல் சிக்கிய பிறகும் அமைச்சர் இன்னும் பதவியில் நீடிப்பது அரசியல் சட்டத்திற்கு விரோதமானது மட்டுமல்ல - சகித்துக் கொள்ள முடியாதது.

ஏற்கனவே குட்கா குடோன்களுக்கு சீல் வைக்கப்பட்டு, வருமான வரித்துறையிடம் சிக்கிய டைரியின் அடிப்படையில் வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அமைச்சரின் தந்தையே அமைச்சரின் பதவியை பயன்படுத்தி லஞ்சம் பெற்றதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருப்பதும், கோடிக்கணக்கான ரூபாய் லஞ்சமாக வசூல் செய்திருப்பதாலும் சுகாதாரத்துறை அமைச்சர் திரு விஜயபாஸ்கர் உடனடியாக பதவி விலகுவதுதான் அவர் எடுத்துக் கொண்ட பதவி பிரமாணத்திற்கு பொருத்தமானதாக இருக்கும்.

குட்கா ஊழலில் சம்பந்தப்பட்டுள்ள அமைச்சரும், காவல்துறை டி.ஜி.பி.யும் பதவியில் தொடர்ந்து கொண்டிருப்பதுபோல், இப்போது வருமான வரிச் சோதனையில் வெளிவந்துள்ள மெகா ஊழலுக்குப் பிறகும் பதவியில் நீடிக்க சுகாதாரத்துறை அமைச்சர் முயற்சி செய்வது அரசியல் சட்டத்திற்கு செய்யும் துரோகமாகும். ஏற்கனவே குட்கா ஊழல் வழக்கில் பல ஆதாரங்களும் காணாமல் போனது போல் இப்போது வருமான வரித்துறையிடம் கொடுத்த வாக்குமூலத்தை மறுத்து அமைச்சர் தன் தந்தை மூலம் அறிக்கை வெளியிட்டிருப்பது, இந்த லஞ்ச ஊழல் வழக்கின் விசாரணைக்கான அனைத்து மூல ஆதாரங்களையும் அழிக்கும் கூட்டுச் சதியாகவே கருத வேண்டியதிருக்கிறது.

ஆகவே, இனியும் எவ்வித காலதாமதமும் செய்யாமல் அமைச்சர் விஜயபாஸ்கர் உடனடியாக பதவி விலகிட வேண்டும் என்றும் அவர் பதவி விலக மறுத்தால் முதலமைச்சர் உடனடியாக அமைச்சர் விஜயபாஸ்கரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். தன் மீதும் ஊழல் வழக்குகள் இருப்பதால் முதலமைச்சர் டிஸ்மிஸ் செய்ய தயங்கினால், அரசியல் சட்டத்தின் மாண்பை காப்பாற்றும் மிக முக்கியப் பொறுப்பில் உள்ள மாண்புமிகு தமிழக ஆளுநர் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்