சினிமா பாணியில் சி.பி.ஐ. அதிகாரிகள் போல் நடித்து டாஸ்மாக் ஊழியர் வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் திருப்பூரைச் சேர்ந்த பனியன் கடை உரிமையாளர் மனைவி உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 100 பவுன் நகைகள் 5 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் மற்றும் காரையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல் அருகே உள்ள பொன்னகரம் அண்ணாநகரைச் சேர்ந்த காளீஸ்வரன். இவர் டாஸ்மாக் கடை ஊழியராக இருந்து வருகிறார். இவருடைய மனைவி அருணா தேவி. அந்தப் பகுதிகள் அங்கன்வாடி ஊழியராக வேலை செய்கிறார். இந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி காளீஸ்வரன் மட்டும் வீட்டில் இருந்தார். அவருடைய மனைவி வேலைக்குச் சென்று விட்டார். அப்போது அவருடைய வீட்டின் முன்பு ஒரு கார் வேகமாக வந்து நின்றது. அதிலிருந்து டிப்-டாப்பாக இறங்கிய சிலர் வீட்டுக்குள் சென்று காளீஸ்வரனிடம் விசாரித்தனர். வந்த ஆசாமிகள் தங்களை சி.பி.ஐ. அதிகாரிகள் மற்றும் போலீசார் என்று கூறினர் மேலும் வீட்டை சோதனை செய்ய வேண்டும் என்று கூறி வீடு முழுவதும் சோதனை செய்த பின்னர் வீட்டில் பீரோவை திறந்து காண்பிக்கும்படி அவர்கள் கூறினர். அதற்கு தன்னிடம் பீரோ சாவி இல்லை என்றும் தனது மனைவியிடம்தான் சாவி இருக்கிறது என்றும் காளீஸ்வரன் கூறினார்.
இதையடுத்து அந்த ஆசாமிகள் காரில் அங்கன்வாடிக்குச் சென்று அருணாதேவி அழைத்து வந்தனர். மேலும் சோதனை செய்வதற்கு வசதியாக பீரோவை திறந்து காட்டும் படி அவரை மிரட்டினர். சி.பி.ஐ. அதிகாரிகள் என்று கூறியதால் மிரண்டுபோன அருணாதேவி உடனே பீரோவில் இருந்த நகைகள் பணம் மற்றும் நிலத்துக்கான பத்திரங்களைக் காட்டினார். அதனை எடுத்துக் கொண்டு தப்பி விட்டனர்.
அதிகாரிகளாக வந்தவர்கள் மீது சந்தேகம் அடைந்த காளீஸ்வரன் திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் ஒரு லட்சம் மற்றும் 50 பவுன் நகைகள் நில பத்திரங்களை எடுத்துச் சென்றதாகக் கூறி இருந்தார். போலீசார் விசாரணை நடத்தியதில் சி.பி.ஐ. அதிகாரிகள் போல் வந்து மோசடி நபர்கள் என்பது தெரியவந்தது. எனவே அது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். எனினும் கொள்ளையர்கள் குறித்து எந்த ஒரு துப்பும் கிடைக்கவில்லை. இதற்கிடையே திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி.யாக முத்துசாமி போலீஸ் சூப்பிரண்டாக ரவளி பிரியா ஆகியோர் சமீபத்தில் பொறுப்பேற்றனர். இதையடுத்து நீண்ட நாட்களாகக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கபடாமல் இருந்த நிலையில் வழக்குகளை மீண்டும் விசாரணைக்கு எடுத்தனர்.
அதன்படி சி.பி.ஐ. அதிகாரிகள் போல் நடித்துக் கொள்ளையடித்த வழக்கை விசாரித்து கொள்ளையர்களைப் பிடிக்கும் படி போலீஸ் சூப்பிரண்டு ரவளி பிரியா உத்தரவிட்டார். மேலும் திண்டுக்கல் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன் சப்-இன்ஸ்பெக்டர்கள் மாரிமுத்து பாஸ்டின் தினகரன் ஏடுகள், சங்கர நாராயணன் சந்தியாகு செந்தில் குமார் மருதபாண்டி அருளானந்தம் பிரபாகரன் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர்.
அப்போது சம்பவத்தன்று அந்தப் பகுதியில் செயல்பாட்டில் இருந்த செல்ஃபோன் எண்கள் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான கார் மற்றும் சந்தேக நபர்களின் உருவத்தைக் கொண்டு விசாரித்தனர். திருப்பூரைச் சேர்ந்த ஒரு கும்பல் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் திருப்பிச் சென்று விசாரித்ததில் காளீஸ்வரன் உறவினரும் திருப்பூர் மாவட்டம் சாமுண்டி புரத்தைச் சேர்ந்த பனியன்க டைை உரிமையாளருமான கோபி தனது கூட்டாளியுடன் சேர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் போல் நடித்து நகைகள் பணத்தைக் கொள்ளையடித்துக் கண்டுபிடித்தனர்.
மேலும் கொள்ளையடித்த நகைகள் பணத்தை வைத்து கோபி தனது மனைவி மகன் பெயரில் சொத்துகள் வாங்கியது தெரியவந்தது இதைத்தொடர்ந்து கோபி அவருடைய மனைவி மாலதி மகன் வினோத் மற்றும் கோபியின் கூட்டாளிகளான சண்முக நகரைச் சேர்ந்த ஐயப்பராஜன் முத்துக்குமார் அவனாசி சேர்ந்த கோபால் செட்டி ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 100 பவுன் நகைகள் 5 லட்சம் மற்றும் 5 கோடி மதிப்பிலான சொத்துகளை ஆவணங்கள் கொள்ளைக்கு பயன்படுத்திய கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். 'தானா சேர்ந்த கூட்டம்' என்னும் சினிமாவில் கதாநாயகன் சி.பி.ஐ. அதிகாரி வருமான வரித்துறை அதிகாரி என்று கூறி கொள்ளை அடிப்பதே பாணியில் காளீஸ்வரன் வீட்டில் கொள்ளை நடந்துள்ளது எனவே கைதான 6 பேருக்கும் ஏதாவது கொள்ளையில் தொடர்பு இருக்கிறதா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார் மேலும் இந்தக் கொள்ளை சம்பவம் அரங்கேறி ஓராண்டு நிறைவு பெறும் நிலையில் அதற்கு முந்தைய நாளான நேற்று கொள்ளையர்களை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.