உலக நாடுகளை அச்சுறுத்திய கரோனா வைரஸ் இந்தியாவிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கரோனா வைரஸால் 16,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக மராட்டியத்தில் 4200 பேரும், டெல்லியில் 1893 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இருந்த போதிலும் தமிழகத்தில் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. தமிழகத்தில் 1477 பேருக்கு இதுவரை கரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருகிறது. மேலும் கரோனா சமூகப் பரவலாக மாறாமல் இருக்க கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் கண்டு விரைவாகத் தனிமைப்படுத்தும் முயற்சியில் அரசு தீவிரக் கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் சென்னை திருவல்லிக்கேனி பெரிய தெருவில் உள்ள தங்கும் விடுதியில் தங்கியிருந்த முன்னணி நிறுவனப் பத்திரிகையாளர் ஒருவருக்கு நேற்று இரவு கரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து அந்தப் பகுதி முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அந்த விடுதியில் இருந்த 42 பேருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளதாகச் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.