விஜய், தனது மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றியுள்ளார். தமிழக வெற்றி கழகம் என தனது கட்சிக்கு பெயர் வைத்துள்ளதாக அறிவித்த விஜய், அதை இந்தியத் தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளார். கட்சியின் பெயரை அறிவித்ததைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கட்சி நிர்வாகிகள் கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர். அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக துணைப்பொதுச்செயலாளரும், எம்.பியுமான கனிமொழியிடம் விஜய்யின் அரசியல் கட்சி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்; அதேபோல் விஜய்க்கும் அந்த உரிமை இருக்கிறது” என்றார்.
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை, சட்டமன்ற தேர்தலில்தான் விஜய் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். அப்படி இருக்கும் போது திமுகவிற்குப் பாதிப்பை ஏற்படுத்துமா என்ற கேள்விக்கு, “நிச்சயமாக திமுகவிற்கு எந்த பாதிப்பும் இருக்காது. முதல்வரின் நல்லாட்சியினால் மக்கள் மீண்டும் திமுகவைதான் தேர்ந்தெடுக்க வாக்களிப்பார்கள் என்று பதிலளித்தார்.
விஜய்யின் எதிர்காலம் குறித்த கேள்விக்கு, ஒருவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று முடிவு செய்து அரசியலில் வந்திருக்கிறார். அப்படி இருக்கும் போது அவருடைய எதிர்காலம் எப்படி இருக்கும் என்று என்னால் சொல்ல முடியாது” எனத் தெரிவித்தார்.