எம்.ஜி.ஆர், சிவாஜி தொடங்கி லேட்டஸ்ட்டாக கமல்ஹாசன் வரை அரசியல் பிரவேசம் மேற்கொண்ட சினிமா நட்சத்திரங்கள் ஏராளம். ஆனாலும், இதில் ஒரு சிலரால் மட்டுமே ரசிகர்கள் கூட்டத்தை வாக்குகளாக மாற்ற முடிந்தது. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்த்தின் அரசியல் வருகை பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் அரசியலில் ஈடுபடப்போவதில்லை என அறிவித்துவிட்டார். இந்நிலையில், அவருக்கு அடுத்த தலைமுறை நடிகரான விஜய், அரசியலுக்கு வரலாமா என ஆராய்வதற்காக சில சோதனை முயற்சிகளில் ஈடுபட துவங்கியுள்ளார்.
அதன்படி, கடந்த ஆண்டு நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தின் ஆதரவுடன் முதன்முறையாக வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கட்சி சார்பு இல்லாத ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு மொத்தம் 169 இடங்களில் போட்டியிட்டனர். இதில் பலர் வெற்றியும் அடைந்தார்கள். அப்படி வெற்றிப் பெற்றவர்களை நடிகர் விஜய் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து புகைப்படங்களும் எடுத்துக்கொண்டார்.
இந்நிலையில், பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், தேர்தலில், விஜய் படம், விஜய் மக்கள் இயக்க கொடியைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதி தரப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தல்களின் மூலம் ஆழம் பார்க்கும் விஜய், ஒருவேளை இதில் சொல்லத் தகுந்த வெற்றி கிடைத்தால் தனது அரசியல் பயணத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தலாம் என்று கூறப்படுகிறது.