விஜய், தனது மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றியுள்ளார். தமிழக வெற்றி கழகம் என தனது கட்சிக்கு பெயர் வைத்துள்ளதாக அறிவித்த விஜய், அதை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளார். கட்சியின் பெயரை அறிவித்ததைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கட்சி நிர்வாகிகள் கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர்.
இதனிடையே கட்சியின் சார்பில் அறிக்கை வெளியிட்ட விஜய், ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள ஒரு படத்தில் நடித்துவிட்டு முழுமையாக கட்சிப் பணிகளை கவனிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். இப்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். இது ஒரு புறம் இருக்க, விஜய்க்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர் விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்திருப்பது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ''தொடங்குவது எளிது தொடர்வது தான் கடினம். தொடங்கும் போது இருக்கும் ஆர்வமும் ஈடுபாடும் கடைசிவரை இருந்தால் யார் வேண்டுமானாலும் வெல்லலாம். அதில் தம்பி விஜய் மட்டும் விதிவிலக்கல்ல.
விஜய் என்ன கோட்பாடுகளை வைக்கிறார் என்று பார்க்க வேண்டும். இன்று இருக்கும் அரசியல் சூழலில் ஒரு நடிகர் கட்சி ஆரம்பித்து ரசிகர்கள் மட்டும் வாக்களித்து வெற்றி பெற முடியாது. வெகுவான மக்களையும் நாம் இழுக்க வேண்டும். எம்ஜிஆருக்கு அது இருந்தது. அதனால் பொதுவான மக்களின் ஆதரவும் இருந்தது. அந்த அரசியல் சூழலில் ஒரு வெற்றிடம் இருந்தது. அதனால் மண்ணை வெல்வதற்கு முன்பு மக்களின் மனதை வெல்ல வேண்டும். மக்களின் இதயத்திற்கு நெருக்கமாக இறங்கி செல்ல வேண்டும். அது ஒரு நாள் இரண்டு நாட்களில் நடக்காது. பல ஆண்டுகள் பயணம் செய்து கொண்டே இருந்தால்தான் அதை நெருங்க முடியும். அதை விஜய் செய்வார் என்று நான் நம்புகிறேன்'' என்றார்.
அப்போது செய்தியாளர் ஒருவர் 'விஜய் மக்களின் மனதை வெல்வாரா?' என கேள்வி எழுப்ப, ''வெல்ல வேண்டும்'' என்றார்.