உலக மகளிர் தினத்தை சிறப்பிக்கும்விதமாக தென்னக ரயில்வே, சேலம் டவுன் ரயில்வே ஸ்டேஷனை, மகளிர் ரயில்வே நிலையமாக மாற்றும் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.
மகளிர் தினத்துக்கு தாய், சகோதரி, மனைவிக்கு நம்மாலான பரிசுகளை அளித்து அவர்களை உற்சாகப்படுத்துகிறோம். அதேபோல், தென்னக ரயில்வேயும் மகளிர் தின பரிசாக, இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆலோசித்துவருகிறது.
இந்த தீர்மானம் நடைமுறைக்கு வரும்பட்சத்தில் தமிழகத்தில் முழுக்க பெண்களாலே நிர்வகிக்கப்படும் முதல் ரயில்வே நிலையம் என்ற பெருமை சேலம் ரயில் நிலையத்துக்குக் கிடைக்கும்.
டிக்கெட் கொடுப்பது, சுத்தம்செய்வது, ரயில்களை இயக்குவது, பாதுகாப்பு மற்றும் அனைத்துவிதமான தினசரி நடவடிக்கைகளுக்கும் பெண் பணியாளர்கள் நியமிக்கப்படுவர். பெண்களின் முன்னேற்றத்துக்கும், அவர்களது தன்னம்பிக்கையை அதிகரிப்பதற்கும் இந்த நடவடிக்கை உதவுதாக அமையுமென தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
சேலம் நகரத்துக்கு அருகிலேயே புறநகர் ரயில்வே நிலையம் ஒன்று அமைந்துள்ளதால், பெண்கள் இந்த ரயில் நிலையத்தை நிர்வகிப்பது எளிதாக இருக்கும். அதேசமயம், சேலத்தில் அடிக்கடி போராட்டங்கள் நடக்குமென்பதால், பாதுகாப்பு அம்சங்கள், அவசர நிலைகளைச் பெண்களால் சமாளிக்கமுடியுமா என்பதுகுறித்தும் ரயில்வே பரிசீலித்துவருகிறது.