Skip to main content

"ரயில்ல தள்ளி விட்டு தண்டிக்கும் படி சத்யாவின் சார்பாக கேட்கிறேன்.."- விஜய் ஆண்டனி ஆவேசம்

Published on 14/10/2022 | Edited on 14/10/2022

 

vijay antony tweet about sathya issue

 

சென்னை கிண்டி ஆதம்பாக்கத்தில் உள்ள ராஜா தெருவை சேர்ந்தவர் கல்லூரி மாணவி சத்யா. தனியார் கல்லூரி ஒன்றில், பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்த சத்தியாவுக்கு, 20 வயது ஆகிறது. சத்தியாவின் தந்தை மாணிக்கம். இவர், கார் ட்ராவல்ஸ் வைத்து நடத்தி வந்துள்ளார். தாய் ராஜலட்சுமி ஆதம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார். மாணவி சத்தியாவின் சித்தி உள்ளிட்ட குடும்பத்தார் பலரும், சென்னை மாநகர காவல்துறையில் பணியாற்றி வந்துள்ளனர்.


 

இந்நிலையில், சத்யா குடியிருக்கும் அதே பகுதியில் வசித்து வந்துள்ளார், ஓய்வுபெற்ற SI தயாளன். இவரது மகன் 23 வயதான சதீஷ். முழுதாக எட்டாம் வகுப்பை கூட தாண்டாத சதீஷுக்கு, சத்யா மீது காதல் வந்துள்ளது. பள்ளிப் பருவத்தில் இருவரும் பழகி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், நாளடைவில் சதீஷின் பழக்கவழக்கம் பிடிக்காத சத்யா, தன்னை தொந்தரவு செய்யவேண்டாம் எனக் கூறி, சதீஷிடம் இருந்து விலகியுள்ளார். ஆனால், இதை ஏற்றுக்கொள்ள முடியாத, பள்ளி காலத்துக் காதலை நினைத்துக்கொண்டு, சத்யாவை டார்ச்சர் செய்துள்ளார். சத்யா போகும் வரும் இடமெல்லாம் நின்றுகொண்டு, தன்னை காதலிக்குமாறு தொந்தரவு செய்துள்ளார்.

 

ஒரு கட்டத்தில், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான சத்தியா, சதீஷின் டார்ச்சர் குறித்து தனது குடும்பத்தாரிடம் சொல்லியுள்ளார். இதனால் சத்யாவின் பெற்றோர், சதீஷின் பெற்றோரிடம் நடந்ததை சொல்லி கண்டித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும், திருந்தாத சதீஷ் மீண்டும் மீண்டும் சத்யாவை தொந்தரவு செய்துள்ளார். இதனால் அதிருப்தியடைந்த சந்தியாவின் பெற்றோர், மாம்பலம் காவல் நிலையத்தில், சதீஷ் மீது இரண்டு முறை புகார் அளித்துள்ளனர். இந்நிலையில், மாணவி சத்யாவுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.


 

காதலித்த பெண் வேண்டாம் என சொன்ன விரக்தியில் போதை பழக்கத்திற்கு அடிமையான சதீஷின் நடவடிக்கை நாளுக்கு நாள் வீரியமடைந்துள்ளது. போலீஸ் கம்ப்ளைன்ட்க்கு கூட அஞ்சாத அளவுக்கு, சதீஷின் வறட்டு பிடிவாதம் கண்ணை மறைத்துள்ளது. இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை வழக்கம்போல கல்லூரிக்குச் செல்வதற்காக, மாணவி சத்யா மதியம் 12.45 மணி அளவில், தோழிகளுடன் பரங்கிமலை ரயில் நிலையத்துக்கு வந்துள்ளார்.

 

அப்போது அவரைப் பின்தொடர்ந்து வந்த சதீஷ், பிளாட்பாரம் எண் ஒன்றில் ரயிலுக்காக காத்திருந்த சத்தியாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.. இதனால் இருவருக்கும் இடையே பலத்த தகராறு நடந்துள்ளது. இந்த சமயத்தில், தாம்பரத்திலிருந்து சென்னை கடற்கரை நோக்கி வந்த மின்சார ரயில், பரங்கிமலை ரயில் நிலையத்துக்கு வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென மாணவியை பிடித்த சதீஷ், கண்ணிமைக்கும் நேரத்தில் ரயில் முன் தள்ளியதாக சொல்லப்படுகிறது. இதனைக் கண்ட ரயில் பயணிகள் பலரும், அதிர்ச்சியில் அலறியுள்ளனர்.

 

நடைமேடையில் உயிருடன் பேசிக்கொண்டிருந்த மாணவி, ஒரு நொடிப்பொழுதில் தலை துண்டாகிக் கிடந்த காட்சி, பயணிகள் அனைவரையும் உறையவைத்துள்ளது. இதையடுத்து, உடனடியாக அங்கிருந்து சதீஷ் தப்பிச் சென்றுவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த ரயில்வே போலீசார், பரங்கிமலை ரயில் நிலையம் விரைந்து வந்து, அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதனடிப்படையில், கொலையாளி சதீஷை, அன்று இரவுக்குள் துரைப்பாக்கத்துக்கு அருகில் வைத்து கைது செய்தனர். இதற்கிடையில், மகள் இறந்த தகவலறிந்த சத்யாவின் தந்தை அதிர்ச்சியில் ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து நடைபெற்ற விசாரணைக்குப்பின், திடீர் திருப்பமாக, அவர் மகள் இறந்த துக்கத்தால் மதுவில் விஷம் கலந்து அருந்தியதும், அதனால் அவர் உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது.  காவலர்கள் இதுகுறித்த விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
 

 

இந்த நிலையில், இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் ட்விட்டர் பக்கத்தில், "சத்யாவை கொன்று சத்யாவின் அப்பாவின் தற்கொலைக்கு காரணமான சதிஷை, பொறுமையாக விசாரித்து 10 வருஷத்துக்கு அப்புறம் தூக்குல போடாமல், தயவுசெய்து, உடனே விசாரித்து, ரயில்ல தள்ளி விட்டு தண்டிக்கும்படி, சத்யாவின் சார்பாக பொது மக்களில் ஒருவனாக, கனம் நீதிபதி அவர்களை கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. 

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்