தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை பொழிந்து வருகிறது. பல பகுதிகளில் மாலை வேளையில் பலத்த காற்றுடன் கனமழை பொழிந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை மைய அறிவிப்பின்படி மே 13ஆம் தேதி தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மே 14ம் தேதி தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, மதுரை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். மே 15ஆம் தேதி தேனி, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை, மதுரை, விருதுநகரில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மே 16ஆம் தேதி கோவை, நீலகிரி, கரூர், நாமக்கல், திருப்பூர், சேலம், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அடுத்த ஐந்து நாட்களுக்கு அதிகபட்சமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பொதுவான இயல்பை ஒட்டிய வெப்பநிலை இருக்கும். உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இயல்பை விட இரண்டு அல்லது மூன்று டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக வெப்பநிலை நிலவக்கூடும். உள் மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் அதிகபட்சமாக 40 முதல் 41 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும். இதர மாவட்டங்களில் சமவெளி பகுதிகளில் 37 முதல் 39 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை நிலவ வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.