நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் வாக்கு பதிவு, மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறும் நிலையில், ஒவ்வொரு கட்டங்களாக நடந்து வருகிறது. இதுவரை மூன்று கட்ட வாக்குபதிவுகள் நடைபெற்று முடிந்துள்ளது. முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி அன்று தமிழ்நாடு, மணிப்பூர், உள்ளிட்ட 102 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 89 தொகுதிகளுக்கும் நடைபெற்ற நிலையில் கடந்த 7அம் தேதி மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு உத்தரப்பிரதேசம், குஜராத், பீகார், அசாம், சத்தீஸ்கர், என மொத்தம் 12 மாநிலங்களில் 94 தொகுதிகளுக்கு நடந்தது.
இதையடுத்து நான்காம் கட்ட வாக்குபதிவு மே 13ஆம் தேதியும், ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு மே 20ஆம் தேதியும், ஆறாம் கட்ட வாக்குப்பதிவு மே 25ஆம் தேதியும், ஏழாம் மற்றும் இறுதிகட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதியும் அடுத்தடுத்து நடக்கவிருக்கிறது. ஜூன் 4 வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இதையொட்டி பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களுடன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆந்திராவில் நாடாளுமன்றத்துக்கான நான்காம் கட்டத் தேர்தல் வருகிற 13 ஆம் தேதி (13.05.2024) நடக்கிறது. இந்தத் தேர்தலில் நாடாளுமன்றத்தோடு சேர்த்து ஆந்திர சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதற்காக ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியும், எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பிரபல நடிகர் அல்லு அர்ஜுன், திடீரென ஆந்திரா நந்தியாலா சட்டமன்றத் தொகுதியில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் ரவீந்திர கிஷோர் ரெட்டியின் வீட்டிற்கு வருகை தந்தார். இதனால் அப்பகுதியில் அயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் திரண்டிருந்தனர்.
பின்பு ரசிகர்களுக்கு கையசைத்துவிட்டு, ரவீந்திர கிஷோர் ரெட்டியின் கையை உயர்த்தி காண்பித்து அங்கு வந்திருந்தவர்களிடம் வாக்கு சேகரித்தார். இது தற்போது ஆந்திர அரசியல் வட்டாரத்தில் பரப்பாக பேசப்பட்டு வருகிறது. அல்லு அர்ஜுனின் மாமாவும், ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண், பித்தாபுரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்கும் தனது எக்ஸ் பக்கம் வாயிலாக வாழ்த்து தெரிவித்தார் என்பது குறிப்பிடதக்கது.