பெண் இன்ஸ்பெக்டர் வீட்டிலேயே 450 சவரன் நகைகள் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மதுரை அலங்காநல்லூரில் வசித்து வருபவர் ஷர்மிளா. இவர் திண்டுக்கல் மாவட்டம் விளாம்பட்டி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவருடைய கணவர் இன்ஜினியராக கத்தார் நாட்டில் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். மகன் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். ஐந்தாம் வகுப்பு படித்து வரும் மகளுக்கு கோடை விடுமுறை என்பதால் கடந்த எட்டாம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு இன்ஸ்பெக்டர் ஷர்மிளா தந்தை வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது.
தந்தை வீட்டில் இருந்து தினமும் காவல் நிலைய பணிக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று பணி முடிந்து அலங்காநல்லூரில் உள்ள வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் முன்புற கேட் உடைக்கப்பட்டு இருந்தது உடனடியாக உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 450 சவரன் நகைகள் மற்றும் ஐந்து லட்சம் ரூபாய் ரொக்க பணம் உள்ளிட்டவை திருடு போனது தெரியவந்தது. உடனடியாக காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கப்பட்ட நிலையில் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு இந்தக் கொள்ளை சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. காவல் பெண் ஆய்வாளர் வீட்டிலேயே 450 சவரன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.