
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. தேவநாதன் தலைமையிலான போலீஸார் நடத்திய அதிரடி சோதனையில் 35 லட்சம் பணம், ஒரு கார் ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ளனர்.
இதுகுறித்து விசாரித்தபோது புதுக்கோட்டை மாவட்ட வனத் தோட்டக் கழக மண்டல அலுவலராக உள்ளவர் நேசமணி (38). இவர், புதுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் உள்ள தோட்டக்கலை அலுவலகங்களிலிருந்து அவ்வப்போது கமிஷன் தொகையைப் பணமாகப் பெற்று வந்துள்ளார். அப்படி கமிஷன் பெற்ற பணத்தை எடுத்துக்கொண்டு உளுந்தூர்பேட்டை வழியாக காரில் செல்வதாக விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் ஏ.டி.எஸ்.பி. தேவநாதன் தலைமையிலான போலீஸார் உளுந்தூர்பேட்டை அஜிஸ் நகர் ரவுண்டானா அருகே தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த மகேந்திரா அல்ட்ராஸ் காரில் வனத்துறை மண்டல அலுவலர் நேசமணி வந்தார். அந்த இடத்தில் ஏற்கனவே நேசமணியிடம் பணம் தந்த உளுந்தூர்பேட்டை வனத் தோட்டக் கழகம் வனவர் சங்கர் கணேஷ், அங்குத் தயாராக நின்றிருந்தார். அங்கிருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் இருவரையும் சுற்றி வளைத்து கையும் களவுமாகப் பிடித்தனர்.
பிறகு இருவரையும் உளுந்தூர்பேட்டை வனத் தோட்டக் கழக அலுவலகத்திற்கு அழைத்து சென்று இரவு 12 மணி வரை சோதனையிட்டனர். அப்போது நேசமணியிடம் இருந்து 35 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் அவர் எடுத்து வந்த கார் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தால் உளுந்தூர்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.