ராஜ்நாத்சிங்குடன் வித்யாசாகர் ராவ் மீண்டும் ஆலோசனை
தினகரனுக்கு ஆதரவாக உள்ள 18 எம்.எல்.ஏ.க்கள் பதவியையும் கட்சிதாவல் சட்டப்படி பறித்து சபாநாயகர் தனபால் நேற்று நடவடிக்கை எடுத்தார். சபாநாயகரின் இந்த நடவடிக்கை ஜனநாயக படுகொலை என்று எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.
தமிழக கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் நேற்று சென்னை வருவதாக இருந்தது. தமிழக அரசியலில் ஏற்பட்ட பரபரப்பான சூழல் காரணமாக கவர்னர் வித்யாசாகர் ராவ் சென்னைக்கு பதிலாக அவசரமாக டெல்லிக்கு விரைந்தார். டெல்லி சென்றதும் அவர் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங்கை சந்தித்து பேசினார். அப்போது அவர்கள் தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலை பற்றி ஆலோசித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து ஜனாதிபதி, துணை ஜனாதிபதி ஆகியோரை ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில், இன்று ஆளுநர் வித்யாசாகர் ராவ் தமிழகம் வரவுள்ளதாக கூறப்படுகிறது. சென்னை புறப்படும் முன் மீண்டும் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங்கை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பின் போது, தமிழக அரசியல் சூழல் குறித்து பேசப்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுவதால் ஆளுநர் எத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்போகிறார் என்று அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.