சாதி ஆணவக்கொலை செய்யப்பட்ட கோகுல்ராஜின் வாட்ஸ்அப் வீடியோ காட்சியும், குரலும் கோகுல்ராஜ் உடையதுதான் என்று சென்னை தடய அறிவியல் நிபுணர் திருநாவுக்கரசு நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் இன்று (பிப்ரவரி 4, 2019) வாக்குமூலம் அளித்தார்.
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் (23), கடந்த 23.6.2015ம் தேதி சாதி ஆணவப்படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட 17 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
வழக்கு விசாரணை காலக்கட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களில் அமுதரசு என்பவர் பிணையில் வெளியே சென்றபோது தலைமறைவாகிவிட்டார். ஜோதிமணி என்பவர் கொல்லப்பட்டார். மற்ற 15 பேரும் நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வரும் அரசுத்தரப்பு சாட்சிகள் விசாரணையின்போது ஆஜராகி வருகின்றனர். நீதிபதி இளவழகன் முன்னிலையில் சாட்சிகளிடம் விசாரணை நடந்து வருகிறது.
திங்கள்கிழமையன்று (பிப்ரவரி 4, 2019), கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) செந்தில்குமாரிடம் யுவராஜ் தரப்பு வழக்கறிஞர் ஜி.கே. என்கிற கோபாலகிருஷ்ண லட்சுமணராஜூ குறுக்கு விசாரணை செய்தார். அதையடுத்து, சென்னையில் உள்ள தடய அறிவியல் ஆய்வக துணை இயக்குநர் திருநாவுக்கரசு அரசுத்தரப்பில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
கோகுல்ராஜ் கொலை நடந்த காலக்கட்டத்தில், அவரே பேசி வெளியிட்டதாக ஒரு வீடியோ காட்சி, வாட்ஸ்அப்களில் வெளியானது. அந்தக் காட்சியில், 'பெண்கள் எல்லோரும் பொய்யானவர்கள். என்னைப்போல் யாரும் பெண்களை நம்பி ஏமாந்து விட வேண்டாம். ஒரு பெண்ணை நம்பி நான் ஏமாற்றப்பட்டதால் தற்கொலை செய்து கொள்கிறேன்,' என்று பேசிய ஒரு வீடியோ காட்சி வெளியானது.
அந்த வீடியோ காட்சியின் உண்மைத்தன்மை அறிவதற்காக சென்னையில் உள்ள மாநில தடய அறிவியல் ஆய்வகத்திற்கு சிபிசிஐடி காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். அதை ஆய்வு செய்த துணை இயக்குநர் திருநாவுக்கரசு தலைமையிலான குழுவினர், வீடியோ காட்சியும், அதில் பேசும் குரலும் கோகுல்ராஜ் உடையது என்பதை உறுதி செய்தனர். அந்த தகவலை அவர் 4.2.2019ம் தேதி நாமக்கல் நீதிமன்றத்தில் வாக்குமூலமாக கூறினார்.
'சர்ச்சைக்குரிய அந்த வாட்ஸ்அப் வீடியோ காட்சியை கோகுல்ராஜ் ஒருவர் மட்டுமே பதிவு செய்திருக்க முடியாது. மூன்றாவது நபர் ஒருவர் மூலமாகத்தான் அந்தக் காட்சிகள் பதிவு செய்திருக்க வேண்டும். மேலும், கோகுல்ராஜ் பேசும்போது ஏதோ ஒருவித அச்ச உணர்வுடன் அடிக்கடி எச்சில் விழுங்குகிறார். அவருடைய கண்களும் ஏதோ எழுதிவைத்திருக்கும் செய்தியை பார்த்து பார்த்துப் படிப்பதுபோல் உள்ளது. அவர் பேசி முடித்தபிறகு இறுதியாக, நீங்கள் சொல்லிக் கொடுத்தபடி சொல்லிவிட்டேன்தானே? என்று கேட்பதுபோல் தலையசைக்கிறார்,' என்றும் நீதிமன்றத்தில் கூறினார்.
அப்போது குறுக்கிட்ட யுவராஜ் தரப்பு வழக்கறிஞர் ஜி.கே., தடய அறிவியல் நிபுணர்போல் பேசுங்கள். நீங்கள் மனோதத்துவ நிபுணர்போல பேசக்கூடாது என்று ஆட்சேபணை தெரிவித்தார்.
இதையடுத்து, கடந்த 1.2.2019ம் தேதி சாட்சியம் அளித்த நாமக்கல் மாவட்ட வட்ட வழங்கல் தனி வட்டாட்சியர் சந்திரமாதவனிடம் இன்று குறுக்கு விசாரணை நடந்தது. அவரிடம் எதிர்தரப்பு வழக்கறிஞர் ஜி.கே., கோகுல்ராஜ் கொலையான பிறகு அவருடைய குடும்பத்திற்கு அரசு இழப்பீடு கொடுத்தது. அது நிதித்துறையின் கீழ் வருகிறதா? என்றதற்கு தெரியாது என்று சந்திரமாதவன் கூறினார்.
'இந்த வழக்கின் 1ம் எதிரி (யுவராஜ்) ஒப்புதல் வாக்குமூலம் அளித்தபோது சிஐசிஐடி ஏடிஎஸ்பி எழுதிக் கொடுத்த காகிதத்தைப் பார்த்துதான் உதவியாளர் தட்டச்சு செய்தாரா?' என்றதற்கும், ஏடிஎஸ்பி குறிப்புகள் எழுதிய காகிதம் வாக்குமூலத்துடன் இணைக்கப்பட்டு இருந்ததா? எனக் கேட்டதற்கும் அவர் தெரியாது என்று பதில் அளித்தார்.
மேலும், காவல்துறையினர் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவர்களுக்கு ஆதரவாக நீங்கள் பொய் சாட்சியம் அளித்துள்ளீர்கள் என்று எதிர்தரப்பு வழக்கறிஞர் கூறினார். அதற்கு தனி வட்டாட்சியர் சந்திரமாதவன், தவறு என்று பதில் அளித்தார்.
இதையடுத்து சங்ககிரியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் சாட்சியம் அளித்தார். அவர், 'குற்றவாளி கூண்டில் நிற்பவர்களில் யுவராஜ், தங்கதுரை ஆகியோரை மட்டும் எனக்குத் தெரியும். என் சகோதரர் செந்தில்குமாரிடம் வண்டியை வாங்கிச் சென்றவகையில் அவ்விருவரையும் தெரியும். மற்றபடி, இந்த வழக்கு பற்றி எனக்கு எதுவும் தெரியாது. என் வீட்டுக்கும் யுவராஜ் வீட்டுக்கும் இடையே சுமார் 8 கிமீ தூரம் இருக்கும். வழக்கு தொடர்பாக காவல்துறையினர் என்னிடம் விசாரித்தார்கள். அப்போது, என்னிடம் இருந்து யுவராஜ் ஒரு ஜீப் வாகனத்தை எடுத்துச் சென்றார். அதுகுறித்து விசாரித்தனர்,' என்றார்.
அப்போது அரசுத்தரப்பு வழக்கறிஞர் கருணாநிதி, 'உங்களிடம் இருந்து பெற்றுச்சென்ற ஜீப் வாகனம் எத்தனை கிமீ தூரம் ஓடியிருக்கும்? என்று கேட்டார். அந்த வினாவை எதிர்தரப்பு வழக்கறிஞர் ஜி.கே. கடுமையாக ஆட்சேபித்தார். அப்போது நீதிபதி இளவழகன், சார் இதெல்லாம் லீடிங் கொஷன் (பதிலுடைய வினா) இல்லை என்று ஆட்சேபணையை மறுத்தார்.
இதன் பின்னர், குற்றவாளி கூண்டில் நின்று கொண்டிருந்த யுவராஜ், தங்கதுரை ஆகியோரை ராஜ்குமார் அடையாளம் காட்டினார். (நீதிபதியின் பார்வையில்) இடமிருந்து 6வது நபர் யுவராஜ் என்றும், 4வது நபர் தங்கதுரை என்றும் அடையாளப்படுத்தினார். பின்னர் அவரிடம் அரசுத்தரப்பு வழக்கறிஞர் கருணாநிதி, உங்களிடம் இருந்து யுவராஜ் ஜீப்பை எடுத்துச் சென்றவர் என்னெனன வேலைகளுக்கு பயன்படுத்தினார் என்று தெரியுமா? என்று கேட்டார்.
அதற்கு எதிர்தரப்பு வழக்கறிஞர் ஜிகே, 'இதற்குப் பெயர் குறுக்கு விசாரணை இல்லாமல் வேறு என்னவென்று சொல்வது? என்று நீதிபதியைப் பார்த்து கோபமாக கேட்டார். அதற்கு நீதிபதி, 'சார்... இது பதிலுடைய வினா இல்லை' என்றார். அதற்கு ஜிகே, அப்படியானால் அவர் சொல்வதையெல்லாம் கேட்டு நீங்களே பதிவு செய்து கொள்ளுங்கள் என சலிப்பாக கூறினார். பிறகு நீதிபதி, வேண்டுமானால் கேள்வி&பதிலாக பதிவு செய்து கொள்ளலாம் என்றார். இதற்கு ஜிகேவும் ஒப்புக்கொண்டார். இதையடுத்து, வழக்கறிஞர் ஜிகே, ராஜ்குமாரிடம் சில கேள்விகளை குறுக்கு விசாரணையின்போது கேட்டார்.
அவரைத் தொடர்ந்து சதீஸ்குமார், செந்தில்குமார் ஆகியோரும் சாட்சியம் அளித்தனர். அவர்கள் இருவரும் பிறழ் சாட்சியம் அளித்தனர். இத்துடன் திங்கள்கிழமையன்று சாட்சிகள் விசாரணை முடிந்தது. இதையடுத்து, பிப்ரவரி 6, 2019ம் தேதிக்கு சாட்சிகள் விசாரணையை ஒத்திவைத்து நீதிபதி இளவ-ழகன் உத்தரவிட்டார்.