18வது மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலமாக நடைபெற்றது. அதன்படி, கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி, முதல் கட்டமாகத் தமிழகம், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் 18-வது ஜனநாயகத் திருவிழா தொடங்கி, ஏப்ரல் 26, மே 7, மே 13, மே 20, மே 25, ஜூன் 1 என ஒவ்வொரு தொகுதிகளிலும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று 01-06-24 அன்று 6 மணியுடன் முடிவடைந்தது. 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி (நாளை) எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தமிழகத்தில் பாஜக கூட்டணியில் விருதுநகர் தொகுதியில் நடிகர் சரத்குமாரின் மனைவி நடிகை ராதிகா சரத்குமார் போட்டியிட்டு உள்ளார். இந்நிலையில் நாளை வாக்குகள் எண்ணப்பட இருப்பதால் தனது மனைவியும் பாஜக வேட்பாளருமான ராதிகா சரத்குமார் மற்றும் பாஜக வெற்றி பெற வேண்டும் என்பதற்காக விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோவிலில் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் ஆகியோர் வழிபாட்டில் ஈடுபட்டனர்.
பின்னர் நடிகர் சரத்குமார் கோவிலை சுற்றி அங்கப்பிரதட்சணம் செய்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையங்களில் வைரலாகி வருகிறது. அதே விருதுநகர் தொகுதியில் மறைந்த நடிகர் விஜயகாந்த் தொடங்கிய தேமுதிக கட்சியின் சார்பில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் உள்ளிட்ட பலர் போட்டியிடுகின்றனர். இதனால் விருதுநகர் தொகுதி ஸ்டார்ட் தொகுதியாக உள்ளது குறிப்பிடத்தக்கது