அமெரிக்காவின் அதிபர் தேர்தல் கடந்த மாதம் நடந்தது. இதில் டொனால்ட் ட்ரம்பை வீழ்த்தி அதிபராக ஜனநாயக கட்சியின் ஜோ பைடனும், துணை அதிபராக கமலா ஹாரிஸும் வெற்றி பெற்றனர். இருவரும் நேற்று (20.01.2021) முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டனர்.
புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்றதை அவரது ஆதரவாளர்கள் அமெரிக்கா முழுவதும் கொண்டாடி வருகின்றனர். இதனால் அமெரிக்காவே விழா கோலம் பூண்டிருந்தது. ஜோபைடனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, “இந்தியா - அமெரிக்காவுக்கு இடையேயான நட்பையும் கூட்டாட்சியையும் வலுப்படுத்த இணைந்து பணியாற்ற எதிர் நோக்குகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல, ஜோ பைடனுக்கும், கமலா ஹாரிஸுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கிறார் ராகுல் காந்தி. துணை அதிபராக வெற்றிபெற்று பதவியேற்றுக்கொண்ட கமலா ஹாரிஸின் பூர்வீகம் தமிழகத்தில் உள்ள துளசேந்திரபுரம். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே இருக்கிறது இந்த கிராமம். அமெரிக்க தேர்தலில் கமலா ஹாரிஸ் போட்டியிட்ட நாளிலிருந்தே இந்தக் கிராமத்து மக்கள் உற்சாகமாகவே இருந்தனர். போட்டியில் வெற்றிபெற்றதும் அவர்களின் உற்சாகம் பன்மடங்கானது. இந்நிலையில், துணை அதிபராக கமலா ஹாரிஸ் பொறுப்பேற்றுக் கொண்டதை துளசேந்திரபுரம் மக்கள் கொண்டாடி வருகிறார்கள்.
அந்தக் கிராமத்தில் உள்ள தர்ம சாஸ்தா கோவிலில் கமலா ஹாரிஸ் பெயரில் சிறப்பு வழிபாடு நடத்தினர் கிராம மக்கள். கமலா ஹாரிஸ் பெயரில் அர்ச்சனையும் செய்யப்பட்டது. அவரது பெயரை கோலமிட்டு அதில் அகல்விளக்கு ஏற்றி மகிழ்ந்தனர். கமலா ஹாரிஸ் என்கிற பெயர் அகல் விளக்கின் ஒளியில் பிரகாசமாக இருந்தது. சிறப்பு வழிபாடு முடிந்ததும் கிராம மக்கள் இனிப்புகள் வழங்கியும் பட்டாசுகள் வெடித்தும் உற்சாகமாக கொண்டாடினர். கொண்டாட்டத்தின் இடையே பேசிய கிராம மக்கள், “அமெரிக்காவின் துணை அதிபரான கமலா ஹாரிஸின் பூர்வீகம் தமிழகம் என்பது நமக்கெல்லாம் பெருமை. அவரது பூர்வீகத்தைப் பார்க்க ஒருமுறை அவர் தமிழகம் வர வேண்டும்” என்றனர்.
ஜோ பைடன், புதிய அதிபராக பதவியேற்றதைத் தொடர்ந்து வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறினார் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.