திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் தொகுதியில் இருக்கும் குஜிலியம்பாறை தாலுகா கோட்ட நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு காளீஸ்வரி என்ற மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர். கடந்த 20 வருடங்களுக்கு முன்பு முனியப்பனுக்கு தமிழக அரசின் சார்பில் தொகுப்பு வீடு வழங்கப்பட்டது முதல் தற்போது வரை வீட்டிற்கு தேவையான குடிநீர் வசதி, மின்சார வசதி செய்து தரப்படவில்லை.
இதுகுறித்து முனியப்பன் பலமுறை மாவட்ட கலெக்டர் மற்றும் மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் இவர்களது மூன்று குழந்தைகளும் மண்ணெண்ணெய் விளக்கில் தான் வீட்டில் படித்து வருகின்றனர். மேலும் தம்பதியின் மூத்த மகள் இந்திராணி பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தான் மாவட்ட கலெக்டர் மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பாதிக்கப்பட்ட முனியப்பன், அவருடைய மனைவி மற்றும் 3 பள்ளி மாணவிகள் குடும்பத்தினர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மாவட்ட கலெக்டர் விசாகனிடம் புகார் மனு கொடுத்தனர். அந்த புகார் மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியிருக்கிறார்.