Skip to main content

புறநோயாளிகளுக்கு கரோனாவை பரப்புகிறதா மருத்துவக் கல்லூரி நிர்வாகம்..?

Published on 14/05/2021 | Edited on 14/05/2021

 

Medical College Administration Spreads Corona to Outpatients ..!

 

கரோனா தொற்றைக் குணப்படுத்துவதைவிட தொற்று பரவாமல் தடுப்பதே சிறந்தது என்பதை உணராமல், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலேயே சாதாரண நோயாளிகளுக்கும் கரோனா தொற்று பரவும் அவலம் பொதுமக்களைக் கலங்கடிக்கச் செய்துள்ளது.

 

திருவாரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களான மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள்,  மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையையே பிரதானமாக பயன்படுத்திவருகின்றனர். இங்கு தினசரி திருவாரூர் மட்டுமன்றி சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான நோயாளிகள் வந்து சிகிச்சை பெறுகின்றனர்.

 

இந்தச் சூழலில், தற்போது தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கரோனா தொற்றின் இரண்டாவது அலையில் இருந்து மக்களைக் காக்கும் பொருட்டு, ஊரடங்கு உள்ளிட்ட அதிரடி திட்டங்களை அரசு கையாண்டுவருகிறது. இறப்பு விகிதமும் சராசரியாக அதிகரித்தபடியே இருக்கிறது. திருவாரூர் மாவட்டமும் அதற்கு விதிவிலக்கல்ல.

 

திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள கரோனா தொற்று நோயாளிகள் அனைவரும் திருவாரூர் மருத்துவமனையிலேயே மருத்துவ வசதி பெறுகின்றனர். இந்நிலையில், மருத்துவமனைக்கு கரோனா தொற்று காரணமாக சிகிச்சைக்கு வரும் நோயாளிகள், சிகிச்சை பெறுவதற்குப் புற நோயாளிச் சீட்டு பெற வேண்டியுள்ளது. மற்றவர்கள் புற நோயாளிச் சீட்டு வாங்கும் இடத்திலேயே கரோனா நோயாளிகளுக்கும் புற நோயாளிச் சீட்டு வழங்கப்படுகிறது.

 

கரோனா நோயாளிகளுக்கு என பிரத்தியேகமாக சீட்டு வழங்கும் நடைமுறை ஏதும் இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பின்பற்றப்படவில்லை. எனவே, கரோனா தொற்று நோயாளியோ அல்லது அவர்களது உறவினரோ புற நோயாளிச் சீட்டு வாங்க வேண்டிய நிலை உள்ளது. இதன் காரணமாக தொற்று இல்லாமல் புற நோயாளியாக சிகிச்சை பெறும் சாதாரண பொதுமக்களுக்கு கூட தொற்று பரவும் அபாய நிலை உருவாகியுள்ளது.

 

இதுகுறித்து நோயாளிகளின் உறவினர்களிடம் கேட்டபோது, "மிகுந்த அச்சத்துடனே புற நோயாளிச் சீட்டு பெற வேண்டியுள்ளது. அங்கு கரோனா நோயாளியே சிலநேரங்களில் நேரடியாக வந்து புற நோயாளிச் சீட்டு பெறுகின்றனர். எங்களுக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுவிடுமோ என்கிற பெரும் அச்சம் எழுந்துள்ளது" என்கிறார்கள்.

 

இதுகுறித்து அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜோசப்ராஜிடம் கேட்டபோது. "கரோனா வார்டு பகுதியிலதான் புற நோயாளிச் சீட்டு வழங்கும் நடைமுறை உள்ளது" என்கிறார்.

 

"தற்போதுவரை கரோனா வார்டு பகுதியில் புறநோயாளிகள் சீட்டு வழங்கப்படவில்லை. கரோனா தொற்றைக் குணப்படுத்தும் பணியைவிட கரோனா தொற்றை எளிதாக மற்றவருக்குப் பரப்பும் வேலையையே செய்யுறாங்க” என்கிறார்கள் புறநோயாளிகள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அரசு மருத்துவரால் உயிருக்குப் போராடும் இளம் பெண்! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
Erode district thalavadi government doctor made wrong operation to woman

ஈரோடு மாவட்டம், தாளவாடியில் வசிக்கும் ஓட்டுநர் பிரதீப்குமாரின் மனைவி அனுபல்லவி. வயது 25. இவர்களுக்கு 5, 3 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. அரசு மருத்துவமனையில் குடும்பக் கட்டுப்பாட்டு செய்யப்போய் தனக்கு நேர்ந்த அவலத்தை அனுபல்லவியே நம்மிடம் கூறுகிறார்.

“என்னுடைய வீட்டுக்காரர் டிரைவர். குடும்ப வறுமை காரணமா பெண் குழந்தைகளே போதுமென்று முடிவுசெய்து குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துகொள்ள முடிவுசெய்தோம். தாளவாடி அரசு மருத்துவமனையில் 2022, பிப்ரவரி 22-ஆம் தேதி அட்மிட்டானேன். 28 ஆம் தேதி 8 பேருக்கு ஆபரேஷன் செய்தாங்க. என்னைத் தவிர 7 பெண்களும் டிஸ்சார்ஜாகி வீட்டுக்குப் போய்ட்டாங்க.

எனக்கு அதிக ரத்தப் போக்கு ஏற்பட்டு அபாய கட்டத்துக்குச் சென்றேன். அவசர அவசரமா என்னை ஆம்புலன்ஸ்ல ஏத்தி கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுபோனாங்க. அங்க 25 நாட்கள் ஐ.சி.யூ.வில் இருந்தேன். பிறகுதான் சுயநினைவே வந்தது.

தாளவாடி அரசு மருத்துவமனையில் எனக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்த டாக்டர் என்ன செய்தாரோ தெரியலை. இதயத்துக்குச் செல்லும் அயோட்டா என்ற ரத்தப்போக்கு லேயரை (நரம்பை) துண்டித்து விட்டதாகவும் அதனைச் சரி செய்ய முடியாது. உயிருக்கு ஆபத்தானது என்றும் கோயம்புத்தூர் டாக்டர்கள் கூறினார்கள்.

இப்ப என்னால எந்த வேலையும் செய்யமுடியாது. இரண்டு குழந்தைகள் இருக்குது. என்னுடைய தாயார் வீட்டில்தான் இருக்கிறேன். அடிக்கடி வாந்தி, மயக்கம் இப்படி ஏதேதோ பல்வேறு தொந்தரவுகள், உபாதைகள் இருந்துக்கிட்டே இருக்குது. தாளவாடி டாக்டர்கள் தவறான ஆபரேஷன் செய்ததன் விளைவு நான் என் உயிரை காப்பாற்றிக் கொள்ள போராடிக்கொண்டிருக்கிறேன்.

மீண்டும் ஒரு ஆபரேஷன் செய்யவேண்டுமாம், அதற்கு தனியார் மருத்துவமனைகளில் பல லட்சங்கள் செலவாகும் என்கிறார்கள். கூலி வேலை செய்து பிழைக்கும் நாங்கள் பணத்திற்கு எங்கே செல்வோம்? என்னை பழைய நிலைக்கு கொண்டுவருவதற்கான அறுவை சிகிச்சையை அரசாங்கம் செய்யவேண்டும். தவறான அறுவை சிகிச்சை செய்த அந்த மருத்துவரை தண்டிக்க வேண்டும். அரசு மருத்துவமனையை நம்பிச் சென்று குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்தேன். தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் கவனத்திற்கு நக்கீரன் மூலமாக கொண்டுசென்று எனக்கு உரிய நீதியும், நிவாரணமும் பெற்றுத் தாருங்கள்” என்றார் பாதிக்கப்பட்ட அனுபல்லவி.

ஈரோடு ஆட்சியர் ராஜகோபால் சுங்கராவிடமும் மனு கொடுத்தார். மருத்துவர் குழுவை அழைத்து உடனடியாக என்ன செய்யவேண்டும் என பாருங்கள் என்றார். அந்த மருத்துவர்கள் குழு அறிக்கை தருவதாக கூறிவிட்டுச் சென்றுவிட்டது.

அரசு மருத்துவர்களால் பாதிப்புக்குள்ளான அனுபல்லவிக்கு தாமதமின்றி நீதியும், நிவாரணமும் கிடைக்க தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் உதவுவாரா?

Next Story

சற்றே குறைந்த கொரோனா பரவல்; மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
Slightly less corona spread; Information from Union Ministry of Health

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகை கொரோனாவான ஜேஎன் 1 கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், கடந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. அதேபோல், கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. மேலும், ஒரே நாளில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தது.

இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் நேற்று முன்தினம் (31-12-23) 841 ஆக இருந்த கொரோனா தொற்று நேற்று (01-01-24) 636 ஆக குறைந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.5 கோடியை தாண்டியுள்ளதாகவும், நாடு முழுவதும் இதுவரை 5.33 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.