பெரியார் பல்கலையில் பேராசிரியர்கள் அன்றாடம் பணிக்கு தாமதமாக வருவதால், கொதிப்படைந்த துணைவேந்தர், பதிவாளர் ஆகியோர் பொறுப்பற்ற ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க துறைத்தலைவர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
சேலம் பெரியார் பல்கலையில் 27 துறைகள் இயங்கி வருகின்றன. 140க்கும் மேற்பட்ட உதவி, இணை மற்றும் பேராசிரியர்கள் பணியாற்றுகின்றனர். ஆசிரியர்கள், ஆசிரியரல்லா பணியாளர்கள், தற்காலிக ஊழியர்கள் அனைவரும் வேலை நாட்களில் காலை 9.30 மணிக்குள் பணியில் இருக்க வேண்டும். ஆனாலும் ஊழியர்கள் தாமதகமாக பணிக்கு வருவது தொடர்ந்தது. இதையடுத்து, தாமத வருகையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், கடந்த செப். 1ம் தேதி முதல் முகம் பதிவு செய்யும் பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.
இந்த புதிய உபகரணம் வைக்கப்பட்ட பிறகும்கூட, பணிக்கு தாமதமாக வந்தே பழக்கப்பட்ட ஆசிரியர்கள் வழக்கம்போல் ஆளாளுக்கு ஒரு நேரத்திற்கு வந்தனர். செப். 1 மற்றும் 2ம் தேதிகளில் மட்டும் 75 ஆசிரியர்கள், ஆசிரியரல்லா பணியாளர்கள் காலை 9.30 மணிக்கு மேல் தாமதமாக பணிக்கு வந்திருப்பது தெரிய வந்தது. இதையறிந்த பல்கலை நிர்வாகம், இனிமேலும் தாமத வருகை இருக்கக்கூடாது என அவர்களை எச்சரித்ததுடன் நின்று கொண்டது. இந்நிலையில், டிச. 7ம் தேதி, பல்வேறு துறைகளைச் சேர்ந்த 70 உதவி, இணை மற்றும் பேராசிரியர்கள் பணிக்கு தாமதமாக வந்திருப்பது கண்டு பல்கலை நிர்வாகம் கொதிப்படைந்தது.
இதையடுத்து, பணிக்கு தாமதமாக வந்த ஆசிரியர்கள் மீது அந்தந்த துறைத்தலைவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்கலையின் 'நிரந்தர' பொறுப்பு பதிவாளர் தங்கவேல் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். ஆனால், நடவடிக்கை எடுக்க வேண்டிய துறைத்தலைவர்கள் சிலரும் பணிக்குத் தாமதமாக வந்திருக்கின்றனர். துறைத்தலைவர்கள் செல்வராஜ்(கணிதம்) காலை 9.59 மணிக்கும், போலி சான்றிதழ் புகாரில் சிக்கிய பெரியசாமி (தமிழ்) 9.58 மணிக்கும், நந்தகுமார் (இதழியல்) 9.36க்கும் வருகையைப் பதிவு செய்துள்ளனர். இவர்கள் தவிர, பேராசிரியர்கள் சந்திரசேகர் (கணினி அறிவியல்), ஜனகம் (பொருளியல்), வசந்தா (சுற்றுச்சூழல் அறிவியல்), வெங்கடாசலபதி (புவியமைப்பியல்), ஜனபிரியா (டெக்ஸ்டைல்), திவாகர் (டெக்ஸ்டைல்), சத்தியப்பிரியா (விலங்கியல்) ஆகியோர் மிக அலட்சியமாக காலை 9.50 மணிக்கு மேல் பணிக்கு வந்துள்ளனர். இவர்களில் பேராசிரியர் வெங்கடாசலபதி 'மிக மோசம்' என்று சொல்லும் வகையில் காலை 10.01 மணிக்கு வருகையைப் பதிவு செய்துள்ளார்.
இது தொடர்பாக நேரந்தவறாமையைக் கடைபிடிக்கும் ஆசிரியர்கள் தரப்பில் கேட்டோம், “முன்மாதிரியாக இருக்க வேண்டிய பல்கலை ஆசிரியர்கள் பலர் பாலியல் புகாரில் சிக்கித்தவிப்பது, முன்னாள் துணைவேந்தர் சுவாமிநாதன் காலத்தில் பணம் கொடுத்து பணியில் சேர்ந்த திறமையற்ற ஆசிரியர்கள், சாதி ஆதிக்கம், அரசியல் சார்பு என பெரியார் பல்கலைக்கழகம் எல்லா வகையிலும் ஒழுக்கம் தவறி கெட்டுக் குட்டிச்சுவர் ஆகியிருக்கிறது. ஒவ்வொரு பேராசிரியரும் மாதம் பிறந்தால் 1.50 லட்சம் ரூபாய்க்கு மேல் சுளையாக சம்பளம் பெறுகின்றனர். 8 மணி நேரத்திற்கும் குறைவான பணி, வார விடுமுறை, தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்பு, கோடை விடுமுறை என எத்தனையோ சலுகை மழையில் நனைகிறோம் என்பதுதான் உண்மை. இத்தனை சலுகைகள் இருந்தும், மாணவர்களுக்கு எல்லா விதத்திலும் முன்மாதிரியாக இருக்க வேண்டிய ஆசிரியர்களே பணிக்கு தினமும் தாமதாக வருவது வேதனை அளிக்கிறது. இதுகுறித்து அறிவுரை கூறினால் அவர்களை ஒதுக்கி விடுகிறார்கள். நேரந்தவறாமை என்பது ஆகச்சிறந்த ஒழுக்கம். தாமதமான வருகை என்பது ஒரு குற்றச்செயல் என்ற உணர்வே இங்குள்ள பலரிடம் கிடையாது. தாமதமாக பணிக்கு வருவோரை மைக் மூலம் பகிரங்கமாக அறிவித்து அசிங்கப்படுத்த வேண்டும்,'' என குமுறுகின்றனர் ஒழுக்கமான ஆசிரியர்கள்.
இதுகுறித்து பெரியார் பல்கலை துணைவேந்தர் ஜெகநாதனிடம் கேட்டபோது, “நான் இங்கு துணைவேந்தராக பொறுப்பேற்றது முதல் குறித்த நேரத்திற்குப் பணிக்கு வந்துவிடுகிறேன். பணி நேரத்தில் அடையாள அட்டை அணிந்திருப்பேன். எல்லோருக்கும் நான் முன்மாதிரியாக இருக்க வேண்டும் எனக்கருதி இவ்வாறு செயல்படுகிறேன். ஆனால் ஆசிரியர்களுக்கு அத்தகைய சிந்தனை இருப்பது இல்லை. தாமதமாக பணிக்கு வராதீர்கள் என்று சொன்னாலும் பொருட்படுத்துவதில்லை. காலை 9.30 மணிக்குள் பணியில் இருக்க வேண்டும். அதற்கு மேல் கூடுதலாக 10 நிமிடம் சலுகை எடுத்துக் கொள்ளலாம் என்பதை உரிமையாகக் கோர முடியாது. தொடர்ச்சியாக தாமதமாக வரும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.