சிதம்பரம் சுற்றுவட்டப் பகுதியில் மானாவாரி நிலங்கள் வைத்துள்ள விவசாயிகள் வெட்டிவேர் விவசாயம் செய்து அசத்துகிறார்கள்.
சிதம்பரம் அருகே புதுச்சத்திரம், கொத்தட்டை, பெரியப்பட்டு உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் உள்ள விளை நிலங்களில் நிலத்தடி மண் மணல் பாங்கான இயற்கையாகவே அமைந்துள்ளது. இந்த மண்ணில் விவசாயிகள் ஆண்டாண்டு காலமாக சவுக்கை, தைலம் மரம், கம்பு, சோளம், வெள்ளரி, பாகற்காய் உள்ளிட்ட மாணவரி பயிர்களை பயிர் செய்து வந்தனர்.
இந்தப் பயிர்களை விளையவைப்பதில் விவசாயிகளுக்கு பராமரிப்பு உள்ளிட்ட அதிக செலவு ஆவதால் சிரமம் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதியில் வெட்டிவேர் விவசாயம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வெட்டிவேர் அழகு சாதனப் பொருட்கள், வாசனை திரவியங்கள், சாமி சிலைகளுக்கு மாலையாக அணிவிக்கவும், அதேபோல் வீட்டின் வாசற்படியில் வாசனைக்காக தொங்க விடுகிறார்கள். வெட்டிவேர் மூலம் சோப்பு உள்ளிட்ட பல்வேறு நறுமண பொருட்கள் செய்வதற்கு பயன்படுத்தப்படுகிறது. இதைச் சிதம்பரம் பகுதியில் பெரும்பாலான விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.
இதில் விளைநிலம் வைத்திருப்பவர்கள் வெட்டிவேர் விவசாயத்திற்கு அவர்களின் நிலத்தை மொத்தமாக ஆண்டுக்கு ரூ.25 ஆயிரத்திற்கு சிலர் குத்தகைக்கு விட்டு விடுகிறார்கள். இதில் புதுச்சத்திரம், கொத்தட்டை, பரங்கிப்பேட்டை உள்ளிட்ட சிதம்பரம் சுற்றுவட்டப்பகுதிகளில் சில விவசாயிகள் வெட்டிவேர் விவசாயம் செய்து அசத்தி வருகிறார்கள். இந்த வெட்டிவேர் பத்து மாத பயிர் ஆகும். இதை விவசாயிகள் பராமரித்து தற்போது நல்ல விலைக்கு விற்பதாகவும் கூறுகின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளரும், அப்பகுதி விவசாயியுமான ப.கொளஞ்சியப்பன் கூறுகையில், ''சவுக்கை, தைலம் உள்ளிட்ட மரங்களை இந்த மண்ணில் விவசாயம் செய்தால் 3 ஆண்டு முதல் 4 ஆண்டு காலம் பராமரித்து அறுவடை செய்வது சிரமமாக இருந்தது. எனவே தற்போது இந்தப் பகுதியில் வெட்டிவேர் விவசாயம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது இதனை விவசாயிகள் சில பேர் பயிரிட்டு வருகிறார்கள். தற்போது ஒரு டன் வெட்டிவேர் ரூ 1.50 லட்சம் வரை விற்பனை ஆகிறது. சிதம்பரம், பரங்கிப்பேட்டை, ஆலப்பாக்கம், பெரியப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாயம் செய்யப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு 2 டன் வரை வெட்டி வேர் கிடைக்கிறது. இது விவசாயிகளுக்கு லாபத்தை தருகிறது.
இதில் வெட்டிவேரை நடவு செய்து 3 மாதத்திற்கு களை எடுத்தல் மற்றும் தண்ணி ஊற்றுதல் என்று பராமரிப்பு செலவுதான். இது நன்கு வளர்வதற்கு கோழி சாணத்தை போட்டு தண்ணீர் ஊற்றுவது தான் அதன் பிறகு அவ்வளவு செலவு இல்லை. நன்கு வளர்ந்து விட்டால் அறுவடை செய்யும் போது பொக்லைன் இயந்திரம் மூலம் வேரை பிடுங்கி ஆட்களை கொண்டு வேரை வெட்டி எடுக்கும் கூலிதான். இதனை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள வாசனை திரவியம், நறுமண பொருட்கள் செய்யும் தொழிற்சாலைகளுக்கு அனுப்பட்டு வருகிறது. அதேபோல் கோயிலுக்கு மாலை கட்டுவதற்கும் மொத்தமாக வாங்கி செல்கிறார்கள். ஆனால் கோழி சாணத்தை வயலில் போட்ட பிறகு ஒரு வாரத்திற்கு கெட்ட நாற்றம் அடிக்கும் அப்போது யாரும் கிட்ட சொல்ல முடியாது வயலுக்கு அருகே குடியிருப்பு இருந்தால் சிரமாக இருக்கும்'' என்றார்.