அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வெற்றியூர் மயானத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றித்தரக்கோரி வெற்றியூர் கிராம மக்கள், அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் 'பச்சை மனிதர்' தங்க சண்முகசுந்தரம் தலைமையில் வாயில் கறுப்புத் துணி கட்டி காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வட்டார வளர்ச்சி அலுவலர் ஜாகீர் உசேன் போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு போராட்டத்தைக் கைவிட வலியுறுத்தினார்.
பின்னர் மயானத்தை, மயான சாலையை சர்வேசெய்து மீட்டுத்தர உரிய நடவடிக்கை எடுக்க, மயானத்தில் இறுதிச் சடங்கு செய்வதற்கு கை-பம்ப் அமைக்க, மயான சாலையின் இருபுறமும் வடிகால் வாய்க்கால் ஆகியவை அமைத்துத் தர ஒரு மாத காலத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. பேச்சுவார்த்தையின்போது வட்டார வளர்ச்சி அலுவலர், அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முக சுந்தரம், கீழப்பழுவூர் போலீசார், வெற்றியூர் கிராம ஊராட்சிமன்றத் தலைவர் தவமணி சுப்ரமணியன், வெற்றியூர் கிராம முன்னேற்றக் குழு ஒருங்கிணைப்பாளர்கள் காமராஜ், சிவநேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.