தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று(5.7.2024) இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனைத் தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங்கின் உடல் அயனாவரத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுச் சென்று அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது. இதனையடுத்து, பெரம்பூர் பந்தர் கார்டன் மாநகராட்சி பள்ளியில் ஆம்ஸ்ட்ராங்கினுடைய உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஏராளமான பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள், ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பொதுமக்கள் வருகையையொட்டி பெரம்பூர், செம்பியம் பகுதியில் 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இயக்குநர் வெற்றிமாறன் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “இளைஞர்களை ஒருங்கிணைத்து எல்லோரையும் படிக்க வைத்து அவர்களை நல்வழிப்படுத்தின பெரிய ஆளுமை. இந்த இழப்பு எல்லோருக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு. குறிப்பாக, அவரால் ஈர்க்கப்பட்டு வெவ்வேறு இடங்களில் படித்து பெரிய இடங்களில் இருக்கிற இளைஞர்களுக்கும், அவரை ரோல் மாடலாக எடுத்து படித்துகொண்டு இருப்பவர்களுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு. ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்வதற்கான இடம் தொடர்பாக நீதிமன்றம் சரியான தீர்ப்பு அளிக்கும் என்று நம்புகிறேன். அவர்களின் விருப்பம் என்னவோ அதைச் செய்வதே சரியாக இருக்கும். இந்தப் படுகொலையை வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஒரு கட்சியினுடைய மாநிலத் தலைவருக்கு இப்படி நிகழ்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது” என்று கூறினார்.