தமிழகத்தில் கோடை காலம் காரணமாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் கடந்த ஒரு சில நாட்களாக கோடை மழை பொழிந்து வருகிறது. அதே சமயம் தமிழகத்தின் பல இடங்களில் கனமழையும் பொழிந்து வருகிறது.
இதற்கிடையே தமிழகத்தில் கடந்த 17 ஆம் தேதி முதல் (17.05.2024) முதல் வரும் 20 ஆம் தேதி வரை (நாளை) என அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. எனவே சிவப்பு நிற எச்சரிக்கையை விடுக்கப்படுகிறது. மே 21 ஆம் தேதி (நாளை மறுநாள்) வரை தமிழ்நாட்டில் மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. அச்சமயத்தில் மணிக்கு 50 கி.மீ. வேகம் வரை தரைக்காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அதே போன்று கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்படுகிறது. கேரளாவில் 20 ஆம் தேதி அதிகனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் சார்பில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (19.05.2024) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் இன்றும், நாளையும் (20.05.2024) மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்றுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் இன்று முதல் 21ஆம் தேதி வரை 3 நாட்கள் வரை ஓரிரு இடங்களில் மிக மிக பலத்த மழை பெய்யும் என்பதால் கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்படுகிறது. தென்மேற்கு பருவமழை அடுத்த 36 மணி நேரத்தில் தெற்கு அந்தமான் கடல், தென்கிழக்கு வங்காள விரிகுடாவின் சில பகுதிகள் மற்றும் நிக்கோபார் தீவுகளில் முன்னேற வாய்ப்பு உள்ளது. எனவே தமிழகத்திற்கு மே 22 மற்றும் 23 ஆம் தேதிகளில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் கேரளாவிலும் இன்று முதல் 21ஆம் தேதி வரை என 3 நாட்களுக்கு மிக மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.