வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை (22.11.2023), நாளை மறுநாள் (23.11.2023) என 2 நாட்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை என்பதால் 12 செ.மீ. முதல் 20 செ.மீ. வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
அதேபோன்று கேரளாவிலும் இன்று (21.11.2023) முதல் 5 நாட்களுக்கு கனமழைக்கும், நாளை, நாளை மறுநாள் என 2 நாட்கள் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் ஆந்திரா கடலோர மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கர்நாடகாவில் நாளை முதல் 4 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.