வேங்கை வயல் விவகாரத்தின் விசாரணை நிலை குறித்த அறிக்கையை அளிக்க நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் என பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த உயர்நீதிமன்றத்தால் செய்யப்பட்ட ஒரு நபர் ஆணைய நீதிபதி சத்யநாராயணன் இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய உள்ளார். இந்நிலையில் வேங்கை வயல் விவகாரம் குறித்த நீதிபதி சத்யநாராயணன் விசாரணை நிலை குறித்த அறிக்கையை 4 வாரத்தில் சமர்ப்பிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.