புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில் அண்மையில் சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில் மூன்று பேர் தொடர்புடையவர்கள் என குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இதனை பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்த்து வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.
குறிப்பாக விசிகவின் தலைவர் திருமாவளவன் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டுமென வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் வேங்கைவயல் விவகாரத்தில் 'சிபிசிஐடி அறிக்கையை தங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது; சிபிஐ விசாரணை வேண்டும்' என வலியுறுத்தி கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் விசிகவினர் பேரணியாக செல்ல திட்டமிட்டிருந்தனர்.
சுமார் 300க்கும் மேற்பட்ட விசிகவினர் கலந்து கொண்ட நிலையில், காவல்துறையினர் இந்த பேரணிக்கு அனுமதி மறுத்திருந்தனர். தடையை மீறி அங்கிருந்தவர்கள் கொடிகளுடன் பேரணி செல்ல முயன்ற நிலையில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் விசிகவினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. வேங்கைவயல் சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்யாமல் வழக்கை முடிக்கும் நோக்கில் இந்த குற்றப்பத்திரிகை இருக்கிறது என எதிர்ப்பு தெரிவித்து தடையை மீறி பேரணியில் ஈடுபட்டனர். அங்கிருந்தவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் வாகனத்தில் ஏற்றி கைதுசெய்ய முயன்று வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.