புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டித் தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிப் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். 200 நாளுக்கு மேலாக சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது.
இந்தச் சம்பவத்தில் டி.என்.ஏ பரிசோதனைக்கு மறுத்த 8 பேரிடம் இருந்து நீதிமன்ற உத்தரவுப்படி புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது. இதுவரை 21 பேரிடம் டி.என்.ஏ பரிசோதனை செய்ய ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அண்மையில் நான்கு சிறுவர்களுக்கு டி.என்.ஏ பரிசோதனை செய்ய சிபிசிஐடி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது. இந்நிலையில் நீதிமன்றம் அனுமதியளித்த நிலையில் நாளை மறுநாள் குழந்தைகள் நலக்குழு வழிகாட்டுதலின் படி, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அந்த நான்கு சிறுவர்களுக்கும் டி.என்.ஏ பரிசோதனைக்கு ரத்த மாதிரிகளை எடுக்க உள்ளனர்.
இதற்கான பணிகளில் மாவட்டக் குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலகம் மற்றும் குழந்தைகள் நலக்குழு அமைப்பு ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நான்கு சிறுவர்களில் ஒரு சிறுவனின் வழக்கறிஞர் மட்டும் பாதிக்கப்பட்ட தரப்பையே குற்றவாளியாக்க சிபிசிஐடி நினைப்பதாக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்ய இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இருப்பினும் டி.என்.ஏ பரிசோதனைக்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.