நடிகர் சூர்யா நடிக்கும் காப்பான் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேச்சில் அரசியல் ரீதியான கருத்துக்கள் எதிரொலித்தன. பாஜக அரசின் புதிய தேசிய கொள்கைக்கு எதிராக சமீபத்தில் வாள் சுழற்றியிருந்தார் நடிகர் சூர்யா. இது பல்வேறு தளங்களில் சர்ச்சைகளை ஏற்படுத்தின. இந்த நிலையில், காப்பான் இசை வெளியீட்டு விழாவில் பேசியவர்கள், 'புதிய கல்வி கொள்கை குறித்து சூர்யா பேசிய கருத்துக்களை ரஜினி பேசியிருந்தால் உடனே பிரதமர் மோடிக்கு எட்டியிருக்கும்' என்றனர். இதனை தனது பேச்சில் சுட்டிக்காட்டிய ரஜினி, ‘’நான் பேசினால் மோடிக்கு எட்டியிருக்கும் என்கிறார்கள். ஆனால், சூரியா பேசியதும் எட்டியிருக்கும்‘’என சூர்யாவிற்கான ஒரு முக்கியத்துவத்தை தந்த அவர், தனது பேச்சு மோடிக்கு உடனடியாக தெரிய வரும் என்பதை மறுக்கவில்லை. ரஜினியாகிய நான் எதைப் பேசினாலும் அது உடனடியாக மோடிக்கு தெரியப்படுத்தப்படும் என்பதை உறுதிப்படுத்துவதாக இருந்தது அவரதுப் பேச்சு !
மேலும், சமீபத்தில் சென்னையில் வெளியிடப்பட்ட வைரமுத்துவின் தமிழராற்றுபடையின் நூல் வெளியீட்டு விழாவில், தமிழினம் எப்படி இருக்க வேண்டும்? அந்த இனம் எப்படி செயல்பட வேண்டும்? என ப.சிதம்பரம் தெரிவித்த கருத்துக்களை காப்பான் பட விழாவில் மேற்கோள்காட்டினார் ரஜினி. ரஜினியின் இந்த பேச்சும் அரசியல் ரீதியாக உற்றுப்பார்க்கப்படுகிறது. தமிழராற்றுப்படை நூல் வெளியீட்டு விழாவில் மு.க.ஸ்டாலின், வைகோ ஆகியோர் முன்வைத்த கருத்துக்களை மேற்கோள் காட்டாமல் ப.சிதம்பரத்தின் கருத்துக்களை மட்டும் சுட்டிக்காட்டி ரஜினி பேசியிருப்பதை திமுக, காங்கிரஸ் தரப்பில் விவாதத்தை உருவாக்கியிருக்கிறது.குறிப்பாக, வைரமுத்துவின் நூல் வெளியிட்டு விழாவை பாராட்ட ரஜினி நினைத்திருந்தால் வைரமுத்துவையும் அவரது நூலில் உள்ள கருத்துக்களையும் மட்டும் அவர் பாராட்டியதோடு நிறுத்திக்கொண்டிருக்கலாம். ஆனால், ப.சிதம்பரத்தின் கருத்துக்களை மேற்கோள் காட்டி எதற்காக வியந்து பாராட்ட வேண்டும்? என அறிவாலய வட்டாரங்களில் எதிரொலிக்கிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கும் இதனை சிலர் எடுத்துச் சென்றிருப்பதாகவும் சொல்கின்றனர் திமுக நிர்வாகிகள்.