கடலூரில் சிப்காட் தொழிற்சாலைகளை கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் போராட்டம் நடந்தது. இதில் அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ கலந்து கொண்டு பேசினார்.
கடலூர் மக்களுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் சிப்காட்டில் உள்ள தொழிற்சாலைகளை கண்டித்து நேற்று(10.10.2023) தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் அதன் தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து கடலூர் வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு தலைமையில், தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில நிர்வாகக் குழு உறுப்பினர், மாநகராட்சி கவுன்சிலர் கண்ணன் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் போராட்டத்தை கைவிடுமாறு கூறப்பட்டது. ஆனால் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டம் நடத்தப்படும் என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டு வந்தனர்.
இந்த நிலையில் முற்றுகை போராட்டத்திற்கு போலீஸார் அனுமதி மறுத்தனர். அதற்கு பதில் கடலூர் உழவர் சந்தை பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கினர். இந்த நிலையில் நேற்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர், காலை கடலூர் உழவர் சந்தை பகுதியில் திரண்டனர். அங்கு நடைபெற்ற போராட்டத்தில் மாநிலத் தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ தலைமை தாங்கி சிப்காட் தொழிற்சாலைகளால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி விரிவாக பேசினார். மாநில நிர்வாகக் குழு உறுப்பினரும், மாநகராட்சி கவுன்சிலருமான கண்ணன் வரவேற்று பேசினார். மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் திருமால் வளவன், மாநில அமைப்பு செயலாளர் கண்ணன், மாநில அமைப்புக்குழு உறுப்பினர் ஆனந்த், மாநகர மாவட்டச் செயலாளர் லெனின், மாநகராட்சி கவுன்சிலர் அருள்பாபு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் கோரிக்கைகள் குறித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது. இந்த போராட்டத்தையொட்டி ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பின்னர் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ செய்தியாளர்களிடம் பேசுகையில், “கடலூர் தொழிற்பேட்டையில், தொழிற்சாலை வளாகத்தில் இயங்கக்கூடிய பல்வேறு நிறுவனங்கள் சட்டத்திற்கு புறம்பாக ரசாயன உற்பத்திகளை செய்து வருகிறது. தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றும் கழிவுகள் கடல், ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் கலப்பதால் அப்பகுதி மக்கள் மற்றும் மீனவர்கள் பல்வேறு மர்மமான நோய்கள் ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளனர்.
என்எல்சி இந்தியா நிறுவனம் பழுப்பு நிலக்கரியை திறந்த வெளியில் கையாள்வதால் அதன் துகள்கள் படர்ந்து 250 மடங்கு மாசு ஏற்பட்டுள்ளதாக ஒரு அறிக்கை கூறுகிறது. கடலூர் மாவட்டத்தில் தொழில் தொடங்குவதாகக் கூறி பொதுமக்களின் குறைந்த விலைக்கு நிலங்களை வாங்கி 10 ஆண்டுகள் தொழில் நடத்திவிட்டு, பின்னர் அந்த இடத்தை மனை வணிகமாக மாற்று தொழில் செய்து வருகின்றனர். அதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கக் கூடாது. அந்த இடத்தில் வேளாண்மை உள்ளிட்ட கல்லூரிகள் அல்லது கால்நடை பண்ணையுடன் கூடிய மருத்துவ ஆராய்ச்சி நிலையம் அமைக்க வேண்டும். இதற்காக அந்த இடங்களை அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். ஈரோடு, நாமக்கல், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் விரட்டியடிக்கப்பட்ட சாயப்பட்டறை ஆலைகள் சைமா என்ற பெயரில் பெரியப்பட்டில் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது அதற்கு மீண்டும் உயிர் கொடுத்து தொடங்கும் வேலை நடைபெற்று வருவதாக செய்திகள் வருகிறது. அந்த நிறுவனம் இங்கு தொடங்கப்படக்கூடாது. பரங்கிப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் கோடிக்கணக்கான லிட்டர் தண்ணீரை சுடு நீராக்கி கடலில் விடுவதால் கடல் நீர் மாசு படுவதோடு, கடல்வாழ் அரிய வகை உயிரினங்கள் அழிந்து வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாற்றப்பட்டுள்ளது.
மாசு ஏற்படுத்தும் ஆலைகளை பூட்டி சீல் வைக்க வேண்டும். வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு ஊதியமாற்று விகிதம் ஏற்படுத்தாமல் அடிமையாக வேலை வாங்கி வருகின்றனர். வெளி மாநில தொழிலாளர்களை அனுப்பிவிட்டு, தகுதி உள்ள உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் தொழிற்பேட்டை அருகே முற்றுகைப் போராட்டம் அறிவித்திருந்தேன். ஆனால், மாவட்ட நிர்வாகம் ஆலைகளை பாதுகாக்கின்றோம் என்ற பெயரில் தனியார் நிறுவன முதலாளிகளுக்கு ஆதரவாக பேரணிக்கு அனுமதி மறுத்து ஆர்ப்பாட்டத்துடன் கலைந்து செல்ல கூறிவிட்டனர். இதற்கான பலனை எதிர்காலத்தில் அரசுகள் அனுபவிக்கும். சட்டமன்ற உறுதிமொழி குழு மூலம் ஆய்வு செய்து பல குற்றச்சாட்டுகள் வைத்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர், அதற்கு பதில் அளித்த வேல்முருகன், அதில் ஒன்றை கூட மாசு கட்டுப்பாட்டு வாரியம், தொழிலாளர் ஆணையம், மாவட்ட நிர்வாகம் சரி செய்யவில்லை. அதற்கான கால அவகாசம் அளித்து தான் இந்த போராட்டத்தை அறிவித்தேன்” என்றார்.
மேலும், கூட்டணி கட்சியில் இருந்தாலும் எங்கு மக்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறதோ அங்கு வேல்முருகன் களத்தில் நிற்பான் என்பதற்காக தான் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளேன். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் முன்னறிவிப்பின்றி நானே பூட்டுப் போடும் போராட்டத்தை முன்னெடுப்பேன். சாதி வாரி கணக்கெடுப்புக் கோரி ஜனவரி மாதம் கோட்டையை நோக்கி பேரணியை அறிவித்துள்ளேன். தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி அந்தந்த சாதிகளுக்கான சமூக நீதி வழங்க வேண்டும். அதுவரை 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும்” என்றார்.