வேலூர் பெண்கள் தனிச்சிறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதேபோன்று மற்ற சிறைகளிலும் நடைமுறைப்படுத்த அறிவுறுத்துவேன் என தேசிய மனித உரிமை ஆணைய சிறப்பு கண்காணிப்பாளர் பால் கிஷன் கோயல் கூறியுள்ளார்
வேலூர் தொரப்பாடியில் உள்ள பெண்கள் தனிச்சிறையில் தேசிய மனித உரிமை ஆணைய சிறப்பு கண்காணிப்பாளர் பால் கிஷன் கோயல் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். இவரை வேலூர் சரக சிறைத்துறை டிஐஜி ராஜலக்ஷ்மி, எஸ்.பி அப்துல் ரகுமான் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் பெண்கள் தனிச்சிறையில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் அதன் கோப்புகளையும் ஆய்வு செய்தார், மேலும் சிறைவாசிகளின் பிள்ளைகள் பயிலும் பள்ளி, உணவு கூடங்கள் உணவு வழங்கும் முறை, கைதிகளுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள், சுகாதாரம் குறித்தும் முழுமையாக ஆய்வு செய்து சிறை கைதிகளிடமும் குறைகளை கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது பெண்கள் தனிச்சிறையில் செயல்படுத்தப்பட்டு வரும் விதை திட்டம் மற்றும் சிறைவாசிகளின் பிள்ளைகளுக்கான கல்வித்திட்டம் உள்ளிட்ட அனைத்தும் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், இதனை நான் மற்ற சிறைகளுக்கு ஆய்வுக்கு செல்லும் போது இதே போன்று நடைமுறைப்படுத்த அறிவுறுத்துவேன் என்றும் தேசிய மனித உரிமை ஆணைய சிறப்பு கண்காணிப்பாளர் பால் கிஷன் கோயல் தெரிவித்துள்ளார்.