டெங்கு காய்ச்சலால் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ள வேலூர் மாவட்டத்தில், தடுப்பு பணிகள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரியப்படுத்தினார் ஆனால் உண்மை நிலவரம் அப்படியில்லை என்கிறார்கள். பெரும்பாலும். கிராமங்களில் சுகாதார பணிகளை செய்ய வேண்டும் என ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும், ஊராட்சி செயலாளர்களுக்கும் உத்தரவிட்ட பின்பும் பல கிராமங்களில் அப்பணியை செய்யவேயில்லை எனக்கூறப்படுகிறது.
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட ராசாக்குபேட்டை பகுதியில் பலயிடங்களில் மழைநீர் அங்கங்கு குட்டை போல் தேங்கி உள்ளது. இதனை சரிச்செய்யச்சொல்லி அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் கூறியும் அவர்கள் செய்யவில்லையாம். இதனால் கொசுக்கள் உற்பத்தி அதிகமாகி இரவு பகல் எனபாராமல் பொதுமக்களை கடித்து வருகிறதாம்.
இந்நிலையில் இப்பகுதியை சேர்ந்த இரண்டு பேர் டெங்கு காய்ச்சல் அறிகுறி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இதனால் அதிர்ச்சியான பொதுமக்கள் சுத்தம் செய்யாத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து அப்பகுதி மக்கள் பெரியகுப்பம் ஊராட்சி அலுவலகத்தை நவம்பர் 1ந்தேதி காலை 10 மணிக்கெல்லாம் முற்றுகையிட்டு அங்கிருந்த ஊராட்சி செயலாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நீண்ட வாக்குவாதம், பிரச்சனைக்கு பின் இந்த விவகாரம் மாவட்ட அதிகாரிகளுக்கு சென்று விசாரிக்க தொடங்கினர்.
அதன்பின் இந்த விவகாரத்தில் தலையிட்ட ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள், உடனடியாக அதனை சரிச்செய்யுங்கள் என உத்தரவிட அதன்பின் மக்களை சமாதானம் செய்து அனுப்பிவிட்டு சுத்தம் செய்யும் பணிகள் நடைபெறுகின்றன.