வேலூர் நேதாஜி மார்க்கெட் மிகவும் பரபரப்பானது. ஆயிரக்கணக்கான சிறு வியாபாரிகள் இங்கு வந்து பகல் - இரவு என காய்கறி மற்றும் பொருட்களை வாங்கி செல்வர். இங்கு கரோனா பரவியதை தொடர்ந்து பரிசோதனை முகாம் நடத்தியதில் நூற்றுக்கும் அதிகமான வியாபாரிகளுக்கு கரோனா இருப்பது உறுதியானது.
அதனால் மார்க்கெட்டில் உள்ள மொத்த வியாபாரக் கடைகள் அனைத்தும் கோட்டை பின்புறம் உள்ள மாங்காய் மண்டி அருகே உள்ள காலி இடத்திற்கு மாற்றப்பட்டது.
அங்கு வியாபாரிகள் எந்தக் காரணத்தைக் கொண்டும் சில்லறை விற்பனை செய்யக்கூடாது என மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டார். ஆனால் இங்கு முதல் நாளிலேயே பொதுமக்களுக்கு சில்லறையாக விற்பனை செய்தனர். வியாபாரிகளும் சிறிதும் சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை.
சமூக இடைவெளியை கடைபிடிக்காதது மற்றும் பொதுமக்கள் அளவுக்கு அதிகமாக கூடுவதால் இங்கும் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள காய்கறி மொத்த விற்பனை கடைகளுக்குள் வியாபாரிகள் மட்டுமே அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பொதுமக்கள் உள்ளே செல்லாமல் இருக்க காய்கறி கடைகள் வைக்கப்பட்டுள்ள வளாகத்தின் நுழைவு பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் அங்குள்ள மொத்த வியாபாரக் கடைகள் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
உத்தரவை மீறி இந்த பகுதியில் ஏராளமானோர் சில்லரை விற்பனை கடைகள் வைத்திருந்தனர். இதனால் பொதுமக்களும் அதிகளவில் வந்து காய்கறிகளை வாங்கிச் சென்றனர். இதனால் சமூக இடைவெளி இல்லாத நிலை ஏற்பட்டது.
எங்கு பார்த்தாலும் சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கூட்டமாக இருந்தனர். காலை 5 மணிக்கு முன்னதாக மார்க்கெட் முழுவதும் கடைகள் அடைக்க வேண்டும் எனக் கூறப்பட்ட நிலையில் காலை 7 மணி வரை வியாபாரம் நடந்தது.
இதனால் அதிர்ச்சியான அதிகாரிகள் இதனை தடுக்க முடிவு செய்து கடையை மூடுமாறு கூறினர். இதனால் போலிசாரிடம் வியாபாரிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கூடுதலாக போலிசார் வரவழைக்கபட்டு வியாபாரிகளை கலைந்து செல்ல செய்தனர், மேலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தோடு வியாபாரிகள் ஒத்துழைப்பு தராதது அதிகாரிகளை அதிருப்தியடைய செய்துள்ளது.