தமிழகத்தின் சென்சிடிவான விவகாரங்களைக்கூட, திண்ணைப் பேச்சு போல, தன் இஷ்டத்துக்குப் பேசி வருகிறார் தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி. பிரேக் பிடிக்காத வாகனத்தைப்போல், கட்டுப்பாடு துளியும் இல்லாமல், வேலூர் தொகுதியில் அவரது பிரச்சாரம், திசை தெரியாமல் பயணிக்கிறது.
அப்படி என்னதான் பேசிவிட்டார் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி?
ஸ்டாலின் கூட்டத்தில் குண்டு!
தேர்தல் நேரத்தில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திற்கு முறைப்படி தேர்தல் ஆணையத்தில் அனுமதி வாங்க வேண்டும். இந்த அடிப்படை அறிவுகூட ஸ்டாலினுக்கு தெரியாதா? அனுமதியின்றி ஸ்டாலின் போட்ட ரகசிய கூட்டத்தில் யாராவது குண்டு வைத்தால்.. ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் யார் பொறுப்பேற்பது? சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்கும் வகையில் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றார். இந்த ஆட்சி மீது சட்ட சிக்கலை ஏற்படுத்தும் நோக்கில் ஸ்டாலின் நடவடிக்கைகள் உள்ளன.
தற்கொலையை ஊக்குவிக்கும் கட்சிகள்!
நீட் தேர்வுக்கு தமிழக மாணவர்கள் தங்களது தகுதியைத் தயார்படுத்தி வருகின்றனர். ஒரு சில மாணவர்கள் தற்கொலை செய்கிறார்கள். அவர்களைத் திமுக போன்ற கட்சிகள் ஊக்குவிக்கின்றன. மத்திய அரசு நீட் தேர்வை கொண்டுவந்துள்ளது. தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இருந்தபோதிலும், தற்போதைய சூழ்நிலையில் நீட் தேர்வை எதிர்கொள்ள வேண்டி உள்ளது. அதற்கு மாணவர்களை நாம் தயார் செய்ய வேண்டுமே தவிர, அவர்களின் தற்கொலையை ஊக்குவிக்க கூடாது. சாவில் திமுக போன்ற கட்சிகள் அரசியல் செய்யக்கூடாது. தற்கொலை செய்பவர்களைத் தியாகிகள் ஆக்கி விடுகின்றனர். தற்கொலை செய்வது கோழைத்தனம் என்று எதிர்க்கட்சிகள் அறிவுரை கூற விரும்பவில்லை. தற்கொலைக்கு திமுக கொடுக்கும் அங்கீகாரத்தால் ஏராளமான மாணவர்கள் தற்கொலையை விரும்பி செய்கின்றனர். காலத்துக்கேற்ப நாகரிகமும் மாறிவருகிறது. காலத்துக்கு ஏற்றாற்போல் கல்வியில் மாற்றம் தேவைப்படுகிறது. அதை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்கள் தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். மாணவர்கள் சாவில் கூட திமுக அரசியல் செய்து வருகிறது. எடப்பாடியார் ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்பதில் ஸ்டாலின் பல்வேறு முயற்சி செய்து வருகிறார். அவரது முயற்சிகள் எதுவுமே பலிக்காது.
கொலை, கொள்ளை என்றால் திமுகவினர்தான்!
சட்டம் எல்லாருக்கும் பொதுவானதுதான். அண்ணா திமுகவிற்கும், திமுகவிற்கும் ஒரே விதிமுறைகள்தான். பாத்ரூமில் யார் வழுக்கி விழுந்தாலும் கை உடையத்தான் செய்யும். தமிழகத்தில் எந்தக் கொள்ளை நடந்தாலும், கொலை நடந்தாலும் அதற்குப் பின்னணியில் திமுக கட்சி உள்ளது. சட்டத்தை மீறுவோம், அத்துமீறுவோம், அடங்க மறுப்போம். ஆனால் எங்கள் மீது யாரும் நடவடிக்கை எடுக்க கூடாது என்பதுபோல் ஸ்டாலின் செயல்பாடு உள்ளது.. நாங்கள் அப்படித்தான் இருப்போம் எங்கள் மீது யாரும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்கிற ரீதியிலேயே மு.க.ஸ்டாலின் பேச்சுக்கள் உள்ளன.
இப்படித்தான் பிரச்சாரத்தின்போது பேசி வருகிறார் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி!