ஈரோடு மாவட்டம் பவானிசாகர் வனப்பகுதியில் உள்ளது. மாயாறு மறுகரையில் நீலகிரி மாவட்டத்தில் தெங்குமரஹாடா, அல்லிமாயாறு, கல்லம்பாளையம் ஆகிய மூன்று வனகிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கிறார்கள்.
இந்த கிராமங்களுக்கு செல்லவேண்டுமெனில் பவானிசாகர் வனப்பகுதியில் உள்ள கரடுமுரடான மண்சாலையில் சுமார் இருபது கிலோமீட்டர் பயணித்து பிறகு பரிசலில் மாயாற்றை கடந்து செல்ல வேண்டும். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள இந்த மண்சாலையில் உள்ள இரண்டு பெரும் பள்ளங்களில் பவாசாகர் அணை நீர்த்தேக்கப்பகுதி உள்ளதால் நீர் எப்போதுமே தேங்கியுள்ளது.
இதன்காரணமாக இக்கிராமங்களுக்கு இயக்கப்பட்டு வந்த இரண்டு அரசுப்பேருந்துகள் நிறுத்தப்பட்டது.. கடந்த சில நாட்களாக தெங்குமரஹாடா கிராமத்திற்கு பேருந்து இயக்கப்படாததால் மக்கள் அதிக அவதிக்குள்ளானார்கள். வனகிராம மக்கள் மருத்துவமனை செல்வதற்கு அத்தியாவசிய பொருட்களை வாங்க பவானிசாகர் மற்றும் சத்தியமங்கலம் செல்ல முடியாமல் தவித்து வந்தனர்.
இதுவரை இக்கிராம மக்கள் ஆர்ப்பாட்டம், போராட்டம் என எந்த போராட்டத்திலும் ஈடுபட்டதில்லை. இந்நிலையில் நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும், சேதமடைந்த மண்சாலையை சீரமைக்க வேண்டும், மாயாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டித்தர வேண்டும் எனக்கோரி இந்த மூன்று வன கிராமங்களை சேர்ந்த 400 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று காலை தெங்குமரஹாடவிலிருந்து லாரிகளில் சத்தியமங்கலம் வந்து கோபிசெட்டிபாளையம் சாலையில் உள்ள மாவட்ட வன அலுவலகம் முன்பு திரண்டனர்.
பிறகு அடிப்படை வசதி செய்து தரக்கோரி சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சத்தியமங்கலம் மாவட்ட வன அலுவலர் அருண்லால் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். தற்போது நீர்தேங்கியுள்ள பள்ளங்களில் மண்கொட்டி மேடாக்கி சாலையை சீரமைத்து பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாயாற்றின் குறுக்கே பாலம் கட்டுவதற்கு வனத்துறையின் தடையில்லா சான்று வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம் என மாவட்ட வன அலுவலர் உறுதியளித்தார்.
இதையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வனகிராம மக்கள் கலைந்து சென்றனர். மறியல் போராட்டம் காரணமாக சத்தியமங்கலம் கோபிசெட்டிபாளையம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுவரை இந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் எந்த ஒரு போராட்டத்தையும் கையிலெடுக்காத இந்த வனகிராம மக்கள் முதன்முறையாக சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டு எதையும் போராடித் தான் பெற வேண்டும் என்கிற கொள்கைக்கு அரசே இவர்களை தள்ளியுள்ளது என்பதை உணர்த்தியுள்ளார்கள்.