Skip to main content

இஸ்லாமியர்களின் வாக்குகளை பெற அதிமுக புது வியூகம்!

Published on 23/07/2019 | Edited on 23/07/2019


நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர்களில் ஒருவர் கூட இஸ்லாமியர் இல்லை என சர்ச்சை கிளம்பியது. பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் இஸ்லாமியர்களை புறக்கணிக்கிறது அதிமுக என தங்கள் கட்சி மீதே அதிருப்தியில் இருந்தனர் அதிமுகவில் உள்ள சிறுபான்மையினர். தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 37 தொகுதிகளில் அதிமுக படுதோல்வி அடைந்தது. தேர்தல் தோல்வி குறித்து ஆலோசனை செய்த அதிமுக மேலிடம், சிறுபான்மையினர்  மக்களை தன் பக்கம் இழுக்க முடிவு செய்தது. அதுமட்டுமல்லாமல் கட்சியில் உள்ள இஸ்லாமியர்களை சமாதானப்படுத்த முடிவு செய்தது.

 


இதற்காக சமீபத்தில் நடந்து முடிந்த மாநிலங்களவை தேர்தலில் அதிமுகவுக்கு கிடைத்த 3 இடங்களில் ஒன்றை கூட்டணி கட்சியான பாமகவுக்கு விட்டுக்கொடுதது விட்டது. மற்ற இரண்டு இடங்களில் ஒன்றில் ஒரு இந்துவையும், மற்றொன்றில் ஒரு இஸ்லாமியரையையும் வேட்பாளராக நிறுத்தி எம்.பியாக்கியுள்ளது. இஸ்லாமியர் ஒருவரை எம்.பியாக்கி, நாங்கள் சிறுபான்மையினரின் காவலர்கள் தான் என வேலூர் நாடாளுமன்ற தேர்தல் களத்தில் பிரச்சாரம் செய்து வருகிறது அதிமுக. இதற்காக முகமது ஜான் எம்.பியை தேர்தல் களத்தில் முழுமையாக பயன்படுத்தி வருகிறது.

 

vellore lok sabha election

 


ஆம்பூர், வாணியம்பாடி, பேரணாம்பட்டு, வேலூர் பகுதிகளில் இஸ்லாமியர்கள் நிறைந்து வாழும் பகுதிகளில் தினமும் பிரச்சாரம் செய்கிறார் முகமதுஜான். அதோடு இஸ்லாமியர்கள் வாழும் பகுதிகளில் முகமது ஜான் இல்லாமல் வேட்பாளர் ஏ.சி.சண்முகமும் பிரச்சாரத்துக்கு செல்வதில்லை. மேலும் வாணியம்பாடி, ஆம்பூர், பேரணாம்பட்டு பகுதிகளில் உள்ள இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்த தொழிலதிபர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார் முகமது ஜான். என்னை எம்.பியாக்கி இருக்காங்க. நான் நம் சமுதாயத்துக்கும், நம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் நிச்சயம் அதிகம் பணி செய்வேன். அதனால் என்னை நம்பி ஏ.சி.சண்முகத்துக்கு வாக்களியுங்கள் என வாக்கு கேட்டு வருகிறார் முகமது ஜான்.

 


இதனை உன்னிப்பாக கவனிக்கும் திமுக, பாஜக உறவை அதிமுகவால் உதற முடியுமா? பாஜகவின் கிளை அமைப்பாக மாறியுள்ள அதிமுக, இஸ்லாமிய மக்களை ஏமாற்றவே ஒரு இஸ்லாமியரை எம்.பியாக்கியுள்ளது. இவரால் என்ன செய்து விட முடியும். திமுக எம்.பிக்கள் போல் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப முடியுமா? நாடாளுமன்றத்தில் முத்தலாக் சட்டம் தொடர்பாக பாஜகவை நோக்கி கேள்வி எழுப்பிய அதிமுக எம்.பி அன்வர்ராஜாவின் நிலையை பாருங்கள். யோசித்து முடிவெடுங்கள் என தேர்தல் களத்தில் கூறி வருகின்றனர். புதிய எம்.பி முகமது ஜானால் இஸ்லாமிய வாக்குகள் பெற முடிந்ததா? இல்லையா? என்பது தேர்தல் முடிவுக்கு பின்பே தெரியும்.

 

 

 

சார்ந்த செய்திகள்