வேலூர் மாவட்டத்தை மூன்றாக பிரிப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சுதந்திர தினத்தன்று அறிவித்தார். இதற்கான கருத்து கேட்பு கூட்டம் ஆகஸ்ட் 28 மற்றும் 29 என இரு தேதிகளில் நடைபெறுகிறது. இந்நிலையில் சோளிங்கர் நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் சோளிங்கரை தலைமையிடமாக கொண்டு தனி தாலுக்கா அமைக்க வேண்டும் என பல வருடங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். அந்த கோரிக்கை அப்படியே உள்ளது.
இந்நிலையில் மாவட்டம் பிரிக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டவுடன், அந்த கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது. சோளிங்கரை தனி தாலுக்காவாக அறிவிக்க வேண்டும் என்று சோளிங்கர் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஆகஸ்ட் 28ந்தேதியான இன்று ஒருநாள் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் நூற்றுக்கும் அதிகமான வழக்கறிஞர்கள் கலந்துக்கொண்டுள்ளனர். அவர்களோடு நீதித்துறையை சேர்ந்த பலரும் கலந்துக்கொண்டுள்ளனர்.
சோளிங்கர் மற்றும் அதனை சுற்றியுள்ள நூற்றுக்கும் அதிகமான கிராம மக்கள், சான்றிதழ்கள் பெற, நலத்திட்ட உதவிகள் பெற வாலாஜாவுக்கு வருகின்றனர். சில கிராம மக்கள் அரக்கோணம் தாலுக்கா அலுவலகத்துக்கு செல்கின்றனர். இதனால் மக்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. சட்டமன்ற தொகுதியாக உள்ள சோளிங்கரை தனி தாலுக்காவாக அறிவிக்க வேண்டும் என்றே போராட்டங்கள் நடத்துகிறோம் என்கிறார்கள்.