தமிழகத்தில் உள்ள மதுக்கடைகளை மூடக் கோரியும், 15 பேர் உயிரிழக்க காரணமான கள்ளச்சாராய விற்பனையை தடுக்கக் கோரியும் வேலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மாநில மகளிர் அணி பொதுச் செயலாளர் கார்த்தியாயினி, வேலூர் மாவட்ட தலைவர் மனோகரன் உள்ளிட்ட ஆண், பெண் என 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, கள்ளச்சாராய உயிரிழப்பை தடுக்க தவறிய முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும்; அரசு நடத்தும் மதுக் கடைகளை உடனடியாக மூட வேண்டும்; தற்போதைய தமிழக அரசு, தேர்தலுக்கு முன்பு ஒரு வகையிலும் தேர்தலுக்கு பின்பு ஒரு விதமாகவும் பேசுவது மக்களை ஏமாற்றும் போக்கு என்றும், தமிழக மக்களின் நலன் கருதி பூரண மதுவிலக்கை கொண்டு வர வேண்டும் என்றும் கோஷங்களை எழுப்பினர்.
வேலூர், வெயில் ஊராக மாறி 108 டிகிரி வெயில் மக்களை வாட்டுகிறது. நடந்து செல்லும் மக்களோ, இருசக்கர வாகனத்தில் செல்லும் மக்கள், நிழலைத் தேடி ஓடும் நிலையில் உள்ளது. இன்று பாஜக நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு வந்த அனைவரும் வெயிலில் இருந்து தங்களை காத்துக்கொள்ள பயந்துகொண்டு குடை எடுத்து வந்து அதனைப் பிடித்துக் கொண்டு நின்று கொண்டிருந்தனர். ஆர்ப்பாட்டம் முடிந்ததும் வெயில் காலத்தில் ஏங்க போராட்டம், ஆர்ப்பாட்டம் வைக்கிறீங்க என நொந்து போய் பேசியபடி கலைந்து சென்றனர்.